[2:62]

ஈமான் கொண்டவர்களாயினும், யூதர்களாயினும், கிறிஸ்தவர்களாயினும், ஸாபியீன்களாயினும் நிச்சயமாக எவர் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாள் மீதும் நம்பிக்கை கொண்டு ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்கிறார்களோ அவர்களின் (நற்) கூலி நிச்சயமாக அவர்களுடைய இறைவனிடம் இருக்கிறது, மேலும், அவர்களுக்கு யாதொரு பயமும் இல்லை, அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்.

[2:63]

இன்னும், நாம் உங்களிடம் வாக்குறுதி வாங்கி, 'தூர் மலையை உங்கள் மேல் உயர்த்தி, "நாம் உங்களுக்கு கொடுத்த (வேதத்)தை உறுதியுடன் பற்றிக் கொள்ளுங்குள்; அதிலுள்ளவற்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். (அப்படிச் செய்வீர்களானால்) நீங்கள் பயபக்தியுடையோர் ஆவீர்கள்" (என்று நாம் கூறியதையும் நினைவு கூறுங்கள்).

[2:64]

அதன் பின்னும் நீங்கள் (உங்கள் வாக்குறுதியைப்) புறக்கணித்து (மாறி) விட்டீர்கள்; உங்கள் மீது அல்லாஹ்வின் கருணையும் அவன் அருளும் இல்லாவிட்டால் நீங்கள்(முற்றிலும்) நஷ்டவாளிகளாக ஆகியிருப்பீர்கள்.

[2:65]

உங்க(ள் முன்னோர்க)ளிலிருந்து சனிக்கிழமையன்று (மீன் பிடிக்கக் கூடாது என்ற) வரம்பை மீறியவர்களைப்பற்றி நீங்கள் உறுதியாக அறிவீர்கள். அதனால் அவர்களை நோக்கி "சிறுமையடைந்த குரங்குகளாகி விடுங்கள்" என்று கூறினோம்.

[2:66]

இன்னும், நாம் இதனை அக்காலத்தில் உள்ளவர்களுக்கும், அதற்குப் பின் வரக்கூடியவர்களுக்கும் படிப்பினையாகவும்; பயபக்தியுடையவர்களுக்கு நல்ல உபதேசமாகவும் ஆக்கினோம்.

[2:67]

இன்னும் (இதையும் நினைவு கூறுங்கள்;) மூஸா தம் சமூகத்தாரிடம், "நீங்கள் ஒரு பசுமாட்டை அறுக்க வேண்டும் என்று நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்" என்று சொன்னபோது, அவர்கள்; "(மூஸாவே!) எங்களை பரிகாசத்திற்கு ஆளாக்குகின்றீரா?" என்று கூறினர்; (அப்பொழுது) அவர், "(அப்படிப் பரிகசிக்கும்) அறிவீனர்களில் ஒருவனாக நான் ஆகிவிடாமல் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுகிறேன்" என்று கூறினார்.

[2:68]

அது எத்தகையது என்பதை எங்களுக்கு விளக்கும்படி உம் இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! என்றார்கள். "அப்பசு மாடு அதிகக் கிழடுமல்ல, கன்றுமல்ல, அவ்விரண்டிற்கும் இடைப்பட்டதாகும். எனவே 'உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நிறைவேற்றுங்கள்' என்று அவன் (அல்லாஹ்) கூறுவதாக" (மூஸா) கூறினார்.

[2:69]

அதன் நிறம் யாது! என்பதை விளக்கும்படி நமக்காக உம் இறைவனை வேண்டுவீராக!" என அவர்கள் கூறினார்கள்;. அவர் கூறினார்; "திடமாக அது மஞ்சள் நிறமுள்ள பசு மாடு; கெட்டியான நிறம்; பார்ப்பவர்களுக்குப் பரவசம் அளிக்கும் அதன் நிறம் என அ(வ்விறை)வன் அருளினான்" என்று மூஸா கூறினார்.