[2:77]

அவர்கள் மறைத்து வைப்பதையும், அவர்கள் வெளிப்படுத்துவதையும் நிச்சயமாக அல்லாஹ் நன்கறிவான் என்பதை அவர்கள் அறிய மாட்டார்களா?

[2:78]

மேலும் அவர்களில் எழுத்தறிவில்லாதோரும் இருக்கின்றனர்; கட்டுக் கதைகளை(அறிந்து வைத்திருக்கிறார்களே) தவிர வேதத்தை அறிந்து வைத்திருக்கவில்லை. மேலும் அவர்கள் (ஆதாரமற்ற) கற்பனை செய்வோர்களாக அன்றி வேறில்லை.

[2:79]

ற்பக் கிரயத்தைப் பெறுவதற்காகத் தம் கரங்களாலே நூலை எழுதிவைத்துக் கொண்டு பின்னர் அது அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று கூறுகிறார்களே, அவர்களுக்கு கேடுதான்! அவர்களுடைய கைகள் இவ்வாறு எழுதியதற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்; அதிலிருந்து அவர்கள் ஈட்டும் சம்பாத்தியத்திற்காகவும் அவர்களுக்குக் கேடுதான்!

[2:80]

ஒரு சில நாட்கள் தவிர எங்களை நரக நெருப்புத் தீண்டாது என்று அவர்கள் கூறுகிறார்கள். "அல்லாஹ்விடமிருந்து அப்படி ஏதேனும் உறுதிமொழி பெற்றிருக்கிறீர்களா? அப்படியாயின் அல்லாஹ் தன் உறுதி மொழிக்கு மாற்றம் செய்யவே மாட்டான்; அல்லது நீங்கள் அறியாததை அல்லாஹ் சொன்னதாக இட்டுக் கட்டிக் கூறுகின்றீர்களா?" என்று (நபியே! அந்த யூதர்களிடம்) நீர் கேளும்.

[2:81]

அப்படியல்ல! எவர் தீமையைச் சம்பாதித்து, அந்தக் குற்றம் அவரைச் சூழ்ந்து கொள்கிறதோ, அத்தகையோர் நரகவாசிகளே, அவர்கள் அ(ந்நரகத்)தில் என்றென்றும் இருப்பார்கள்.

[2:82]

எவர் நம்பிக்கை கொண்டு நற்கருமங்களைச் செய்கிறார்களோ, அவர்கள் சுவர்க்கவாசிகள்; அவர்கள் அங்கு என்றென்றும் இருப்பார்கள்.

[2:83]

இன்னும்(நினைவு கூறுங்கள்;) நாம் (யஃகூப் என்ற) இஸ்ராயீல் மக்களிடத்தில், "அல்லாஹ்வைத் தவிர வேறு எவரையும்-எதனையும் நீங்கள் வணங்கக்கூடாது, (உங்கள்)பெற்றோருக்கும், உறவினர்களுக்கும், அநாதைகளுக்கும், மிஸ்கீன்(களான ஏழை)களுக்கும் நன்மை செய்யுங்கள்; மனிதர்களிடம் அழகானதைப் பேசுங்கள்; மேலும் தொழுகையை முறையாகக் கடைப்பிடித்து வாருங்கள்; ஜக்காத்தையும் ஒழுங்காகக் கொடுத்து வாருங்கள்" என்று உறுதிமொழியை வாங்கினோம். ஆனால் உங்களில் சிலரைத் தவிர (மற்ற யாவரும் உறுதி மொழியை நிறைவேற்றாமல், அதிலிருந்து) புரண்டுவிட்டீர்கள், இன்னும் நீங்கள் புறக்கணித்தவர்களாகவே இருக்கின்றீர்கள்.