[5:114]

மர்யமுடைய மகன் ஈஸா, "அல்லாஹ்வே! வானத்திலிருந்து எங்கள் மீது ஓர் உணவு மரவையை இறக்குவாயாக. அது எங்களுக்கு - எங்களில் முன்னவர்களுக்கும், எங்களில் பின் வருபவர்களுக்கும் ஒரு பெருநாளாகவும், உன்னிலிருந்து ஓர் அத்தாட்சியாகவும் இருக்கும். இன்னும் எங்களுக்கு உணவுப் பொருட்களை அளிப்பாயாக. நீயே உணவளிப்பவர்களில் மேலானவனாக இருக்கிறாய்" என்று (பிரார்த்தித்துக்) கூறினார்.

[5:115]

அதற்கு அல்லாஹ், "நிச்சயமாக நான் அதை உங்களுக்கு இறக்கிவைக்கிறேன். ஆனால், அதன்பின் உங்களில் எவரேனும் ஒருவர் நிராகரித்தால், உலகத்தாரில் எந்த ஒருவருக்கும் செய்திராத வேதனையைக் கொண்டு அவரை வேதனைப்படுத்துவேன்" என்று கூறினான்.

[5:116]

இன்னும், "மர்யமுடைய மகன் ஈஸாவே, 'அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்' என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?" என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், "நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;. நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்" என்று அவர் கூறுவார்.

[5:117]

நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்" என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்" (என்றும்);

[5:118]

(இறைவா!) நீ அவர்களை வேதனை செய்தால் (தண்டிப்பதற்கு முற்றிலும் உரிமையுள்ள) உன்னுடைய அடியார்களாகவே நிச்சயமாக அவர்கள் இருக்கின்றனர். அன்றி, நீ அவர்களை மன்னித்து விடுவாயானால், நிச்சயமாக நீ தான்(யாவரையும்) மிகைத்தோனாகவும் ஞானமிக்கோனாகவும் இருக்கின்றாய்" (என்றும் கூறுவார்).

[5:119]

அப்போது அல்லாஹ், "இது உண்மை பேசுபவர்களுக்கு அவர்களுடைய உண்மை பலனளிக்கும் நாளாகும். கீழே சதா நீரருவிகள் ஒலித்தோடிக் கொண்டிருக்கும் சுவனபதிகள் அவர்களுக்குண்டு, அவற்றில் அவர்கள் என்றென்றும் இருப்பார்கள்; அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான். அல்லாஹ்வை அவர்களும் பொருந்திக் கொண்டார்கள் - இது மகத்தான பெரும் வெற்றியாகும்.

[5:120]

வானங்களுடையவும், பூமியினுடையவும், அவற்றில் இருப்பவற்றின் ஆட்சியும் அல்லாஹ்வுக்கே சொந்தம்;. அவனே எல்லாப் பொருட்கள் மீது பேராற்றலுடையோன் ஆவான்.