[6:28]

எனினும், எதை இவர்கள் முன்பு மறைத்திருந்தார்களோ அது இவர்களுக்கு வெளிப்பட்டு விட்டது இவர்கள் (உலகத்திற்குத்) திருப்பி அனுப்பப்பட்டாலும் எதை விட்டு அவர்கள் தடுக்கப்பட்டார்களோ அதற்கே மீளுவார்கள்; நிச்சயமாக அவர்கள் பொய்யர்களே.

[6:29]

அன்றியும், "இவ்வுலகத்தில் நாம் வாழ்ந்திருப்பதைத் தவிர (அப்பால் மறுமை வாழ்வு என்று) ஒன்றும் இல்லை நாம் (மரணத்திற்குப் பின் மறுபடியும்) எழுப்பப் பட மாட்டோம்" என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

[6:30]

இவர்கள் (உயிர்ப்பிக்கப்பட்டு) இவர்களுடைய இறைவனின் முன் நிறுத்தப்படும்போது இவர்களை நீர் காண்பீராயின் (அது சமயம் இறைவன் கேட்பான்) இது உண்மையல்லவா? என்று "ஆம்! எங்களுடைய ரப்பின் மீது ஆணையாக (மெய்தான்)" என்று இவர்கள் கூறுவார்கள்; அப்போது, "நீங்கள் நிராகரித்துக் கொண்டிருந்த காரணத்தால் வேதனையை அனுபவியுங்கள்" என்று அல்லாஹ் கூறுவான்.

[6:31]

ஆகவே, (மறுமை நாளில்) அல்லாஹ்வைச் சந்திப்பதைப் பொய் என்று கூறியவர்கள் நிச்சயமாக நஷ்டம் அடைந்தவர்களாகி விட்டனர்; அவர்களிடம் மறுமை நாள் திடீரென வரும்பொழுது உலகில் நாங்கள் அலட்சியமாய் இருந்ததற்காக எங்களுக்கு ஏற்பட்ட கை சேதமே என்று கூறுவார்கள். மேலும் அவர்கள் தங்கள் (பாவச்) சுமைகளை தங்கள் முதுகுகளின் மேல் சுமப்பார்கள்; அவர்கள் சுமப்பது மிகவும் கெட்டது என்பதை அறிந்துக் கொள்ளுங்கள்.

[6:32]

உலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமேயன்றி வேறில்லை பயபக்தியுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமை வீடே மிகவும் மேலானதாகும்; நீங்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டாமா?

[6:33]

(நபியே!) அவர்கள் (உம்மைப் பொய்யரெனக்) கூறுவது நிச்சயமாக உம்மைக் கவலையில் ஆழ்த்துகிறது என்பதை நாம் அறிவோம்; அவர்கள் உம்மைப் பொய்யாக்கவில்லை ஆனால் இந்த அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் வசனங்களையல்லலவா மறுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

[6:34]

உமக்கு முன்னிருந்த (நம்) தூதர்களும் பொய்ப்பிக்கப்பட்டனர்; அவர்களுக்கு நம் உதவி வரும்வரை, தாம் பொய்ப்பிக்கப்பட்டதையும், துன்புறுத்தப்பட்டதையும், அவர்கள் பொறுத்துக் கொண்டனர்; அல்லாஹ்வின் வாக்குகளை யாராலும் மாற்ற முடியாது (உங்களுக்கு முன்னிருந்த) தூதர்களின் இத்தகைய செய்திகள் உம்மிடம் வந்தேயிருக்கின்றன.

[6:35]

(நபியே!) அவர்களின் புறக்கணிப்பு உமக்கு பெருங் கஷ்டமாக இருந்தால், உம்மால் முடியுமானால் பூமியில் சுரங்கம் வைத்து அல்லது வானத்திலே ஓர் ஏணி வைத்து (ஏறிச்சென்று அவர்கள் விருப்பப்படி) ஓர் அத்தாட்சியை அவர்களிடம் கொண்டுவாரும்; (அப்பொழுதும் அவர்கள் உம்மை நிராகரித்துக் கொண்டு தானிருப்பார்கள்.) அன்றியும் அல்லாஹ் நாடினால் அவர்கள் அனைவரையும் நேர் வழியில் ஒன்று சேர்த்து விடுவான்; ஆகவே அறிவில்லாதவர்களில் ஒருவராக நீர் ஆகிவிடவேண்டாம்.