[6:82]

எவர் ஈமான் கொண்டு அதன் பின்னர் தம்முடைய ஈமானை (இணை வைத்தல் என்னும்) அநீதியைக் கொண்டு களங்கப்படுத்தவில்லையோ, அவர்களுக்கே அபயமுண்டு; இன்னும் அவர்களே நேர்வழியைப் பெற்றுக் கொண்டவர்கள்.

[6:83]

இவை நம்முடைய ஆதாரங்களாகும், நாம் இவற்றை இப்றாஹீமுக்கு அவருடைய கூட்டத்திற்கு எதிராகக் கொடுத்தோம்; நாம் விரும்புவோருக்கு பதவிகளை (மேலும் மேலும்) உயர்த்துகிறோம்; நிச்சயமாக உம்முடைய இறைவன் பூரண ஞானமும் பேரறிவும் உள்ளவன்.

[6:84]

நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், யஃகூபையும் (சந்ததியாகக்) கொடுத்தருளினோம், இவர்கள் அனைவரையும் நாம் நேர்வழியில் செலுத்தினோம்; இதற்கு முன்னர் நாம் நூஹையும் அவருடைய சந்ததியிலிருந்து தாவூது, ஸுலைமான், அய்யூப், யூஸுப், மூஸா, ஹாரூன் ஆகியோரையும் நேர்வழியில் செலுத்தினோம்; இப்படியே நாம் நன்மை புரிவோருக்கு நற்கூலி வழங்குகிறோம்.

[6:85]

இன்னும், ஜகரிய்யா, யஹ்யா, ஈஸா, இல்யாஸ் - இவர்கள் யாவரும் (நேர் வழிசார்ந்த) ஸாலிஹானவர்களில் நின்றுமுள்ளவர்களே.

[6:86]

இன்னும் இஸ்மாயீல், அல்யஸஉ, யூனுஸ், லூத் - இவர்கள் யாவரையும் உலகத்திலுள்ள அனைவரிலும் மேன்மையாக்கினோம்.

[6:87]

இவர்களுடைய மூதாதையர்களிலிருந்தும், இவர்களுடைய சந்ததிகளிலிருந்தும், இவர்களுடைய சதோதரர்களிலிருந்தும் (பலரை) நாம் தேர்ந்தெடுத்து, அவர்களை நேர் வழியில் செலுத்தினோம்.

[6:88]

இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தன் அடியார்களில் அவன் யாரை விரும்புகிறானோ, அவர்களுக்கு இதன்மூலம் நேர்வழி காட்டுகிறான்; (பின்னர்) அவர்கள் இணைவைப்பார்களானால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.

[6:89]

இவர்களுக்குத்தான் நாம் வேதத்தையும், அதிகாரத்தையும், நபித்துவத்தையும் கொடுத்தோம்; ஆகவே இவற்றை இவர்கள் நிராகரித்தால் இதனை நிராகரிக்காத ஒரு சமுதாயத்தினரை இதற்கு நாம் நிச்சயமாக பொறுப்பாக்குவோம்.

[6:90]

இவர்கள் யாவரையும் அல்லாஹ் நேர்வழியில் செலுத்தினான்; ஆதலால், இவர்களுடைய நேர்வழியையே நீரும் பின்பற்றுவீராக "இதற்காக நாம் உங்களிடம் எவ்வித பிரதிபலனையும் கேட்கவில்லை இது (இக்குர்ஆன்) உலக மக்கள் யாவருக்கும் நல்லுபதேசமேயன்றி வேறில்லை" என்றுங் கூறுவீராக.

[6:91]

இவர்கள் அல்லாஹ்வை மதிக்க வேண்டிய முறையில் மதிக்கவில்லை ஏனெனில் அவர்கள், "அல்லாஹ் எந்த ஒரு மனிதர் மீதும் எ(ந்த வேதத்)தையும் இறக்கவில்லை" என்று கூறுகின்றனர்; அவர்களிடத்தில் நீர் கூறும்; "பிரகாசமானதாகவும், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும் மூஸா கொண்டுவந்தாரே அந்த வேத்தை இறக்கியவன் யார்? அதனை நீங்கள் தனித்தனி ஏடுகளாக ஆக்கி, அவற்றில் சிலவற்றை வெளிப்படுத்துகிறீர்கள்; பெரும்பாலானவற்றை மறைத்தும் விடுகிறீர்கள்; (அவ்வேதத்தின் மூலமாகவே) நீங்களும் உங்கள் மூதாதையர்களும் அறியாமல் இருந்தவைகளையெல்லாம் கற்றுக்கொடுக்கப்பட்டீர்கள்." (நபியே! மேலும்) நீர் கூறுவீராக "அல்லாஹ்தான் (அதை இறக்கிவைத்தான்)" பின்பு அவர்களைத் தம் வீணான (தர்க்கத்)தில் விளையாடிக்கொண்டிருக்குமாறு விட்டுவிடுவீராக.