[6:111]

நிச்சயமாக நாம் அவர்களிடம் மலக்குகளை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், இன்னும் எல்லாப் பொருட்களையும் அவர்களிடம் நேருக்குநேர் கொண்டுவந்து ஒன்று சேர்த்தாலும் - அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் - அவர்களில் பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர்.

[6:112]

இவ்வாறே ஒவ்வொரு நபிக்கும், மனிதரிலும் ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை விரோதிகளாக நாம் ஆக்கியிருந்தோம்; அவர்களில் சிலர் மற்றவரை ஏமாற்றும் பொருட்டு, அலங்காரமான வார்த்தைகளை இரகசியமாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள்; (நபியே!) உம்முடைய இறைவன் நாடியிருந்தால் இவ்வாறு அவர்கள் செய்திருக்க மாட்டார்கள் - எனவே அவர்களையும் அவர்கள் கூறும் பொய்க்கற்பனைகளையும் விட்டுவிடுவீராக.

[6:113]

(ஷைத்தான்களின் அலங்காரமான பேச்சை) மறுமையை நம்பாதவர்களின் உள்ளங்கள் செவிமடுப்பதற்காகவும் அதை திருப்தி கொள்வதற்காகவும் அவர்கள் செய்து வந்ததையே தொடர்ந்து செய்வதற்காகவும் (இவ்வாறு ஷைத்தான்கள் மயக்கினர்).

[6:114]

(நபியே! கூறும;) "அல்லாஹ் அல்லாதவனையா (தீர்ப்பளிக்கும்) நீதிபதியாக நான் தேடுவேன்? அவன்தான் உங்களுக்கு (விரிவான) விளக்கமான வேதத்தை இறக்கியுள்ளான்; எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்திருக்கின்றோமோ அவர்கள் நிச்சயமாக இது (குர்ஆன்) உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையாக இறக்கப்பட்டுள்ளது என்பதை நன்கு அறிவார்கள். எனவே நீர் சந்தேகம் கொள்பவர்களில் ஒருவராகி விடாதீர்.

[6:115]

மேலும் உம்முடைய இறைவனின் வார்த்தை உண்மையாலும் நியாயத்தாலும் முழுமையாகிவிட்டது - அவனுடைய வார்த்தைகளை மாற்றுவோர் எவரும் இல்லை - அவன் (எல்லாவற்றையும்) கேட்பவனாகவும், (யாவற்றையும்) அறிபவனாகவும் இருக்கின்றான்.

[6:116]

பூமியில் உள்ளவர்களில் பெரும் பாலோரை நீர் பின்பற்றுவீரானால் அவர்கள் உம்மை அல்லாஹ்வின் பாதையை விட்டு வழிகெடுத்து விடுவார்கள். (ஆதாரமற்ற) வெறும் யூகங்களைத்தான் அவர்கள் பின்பற்றுகிறார்கள் - இன்னும் அவர்கள் (பொய்யான) கற்பனையிலேயே மூழ்கிக்கிடக்கிறார்கள்.

[6:117]

நிச்சயமாக தன்னுடைய நல்வழியை விட்டுத்தவறியவன் யார் என்பதை உம் இறைவன் நன்கு அறிவான் - அவ்வாறே நல்வழியில் செல்பவர்கள் யார் என்பதையும் அவன் நன்கு அறிவான்.

[6:118]

(முஃமின்களே!) நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்புவோராக இருப்பின் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு (அறுக்கப்பட்டவற்றின் மாமிசத்தையே) புசியுங்கள்.