[6:125]

அல்லாஹ் யாருக்கு நேர்வழி காட்ட நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாத்தை ஏற்றுக்கொள்வதற்காக விசாலமாக்குகிறான் - யாரை அவன் வழி கெடுக்க நாடுகிறானோ, அவருடைய நெஞ்சை, வானத்தில் ஏறுபவன் நெஞ்சைப் போல் இறுகிச் சுருங்கும்படிச் செய்கிறான் - இவ்வாறே ஈமான் கொள்ளாதவர்களுக்கு அல்லாஹ் தண்டனையை ஏற்படுத்துகிறான்.

[6:126]

(நபியே!) இதுவே உம் இறைவனின் நேரான வழியாகும் - சிந்தனையுள்ள மக்களுக்கு (நம்) வசனங்களை நிச்சயமாக விவரித்திருக்கின்றோம்.

[6:127]

அவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் (சாந்தியும்) சமாதானமுமுள்ள வீடு(சுவர்க்கம்) உண்டு - அவர்கள் செய்த (நன்மைகளின்) காரணமாக அவன் அவர்களுடைய உற்ற நேசனாகவும் இருக்கிறான்.

[6:128]

அவர்கள் யாவரையும் ஒன்று சேர்க்கும் (மறுமை) நாளில், அவன் (ஜின்களை நோக்கி) "ஓ! ஜின்களின் கூட்டத்தாரே! நீங்கள் மனிதர்களில் அநேகரை (வழிகெடுத்து) உங்களுடன் சேர்த்துக் கொண்டீர்களல்லவா?" என்று கேட்பான். அதற்கு மனிதர்களிலிருந்து அவர்களுடைய நண்பர்கள்; "எங்கள் இறைவா! எங்களில் சிலர் சிலரைக்கொண்டு பலன் அடைந்திருக்கின்றோம். நீ எங்களுக்கு நிர்ணயித்த தவனையை நாங்கள் அடைந்து விட்டோம்" என்று கூறுவார்கள்; அதற்கு அவன், "நரகம் தான் நீங்கள் தங்குமிடமாகும் - அல்லாஹ் நாடினாலன்றி நீங்கள் அதில் என்றென்றும் இருப்பீர்கள் - நிச்சயமாக உமது இறைவன் மிக்க ஞானமுடையோனாகவும், (யாவற்றையும்) நன்கறிந்தவனாகவும் இருக்கின்றான்.

[6:129]

இவ்வாறே அநியாயக்காரர்களில் சிலரை மற்றும் சிலருடன் - அவர்கள் செய்து கொண்டிருக்கும் (பாவச்) செயல்களின் காரணத்தால் - நெருங்கியவர்களாக ஆக்குகிறோம்.

[6:130]

(மறுமை நாளில் இறைவன் ஜின்களையும் மனிதர்களையும் நோக்கி) "ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தாரே! உங்களுக்கு என் வசனங்களை (அறிவித்து) ஓதிக்காட்டவும், இந்த நாளில் (ஏற்படப்போகும்) சந்திப்பைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்யவும் உங்களிலிருந்தே உங்களிடம் தூதர்கள் வரவில்லையா?" (என்று கேட்பான்), அதற்கு அவர்கள், "நாங்களே எங்கள் (பாவத்தின்) மீது சாட்சி கூறுகிறோம்" என்று கூறுவார்கள்; இதற்குக்காரணம் உலக வாழ்க்கை அவர்களை மயக்கிவிட்டது - அவர்கள் காஃபிர்களாக இருந்ததாக அவர்கள் தங்களுக்கு எதிராகவே சாட்சி கூறுவார்கள்.

[6:131]

(இவ்வாறு தூதர்களை அவன் அனுப்பியதற்குக்) காரணம் யாதெனில், அநியாயம் செய்பவர்களின் ஊரை, அதிலிருப்போர் எச்சரிக்கை இல்லாதிருக்கும் நிலையில் அவர்கள் செய்துவிட்ட அநியாயத்தின் காரணமாக உம் இறைவன் அழிப்பதில்லை என்பதேயாகும்.