[7:38]

(அல்லாஹ்) கூறுவான்; "ஜின்கள், மனிதர்கள் கூட்டத்தார்களிலிருந்து உங்களுக்கு முன் சென்றவர்களுடன் நீங்களும் (நரக) நெருப்பில் நுழையுங்கள்." ஒவ்வொரு கூட்டத்தாரும், நரகத்தில் நுழையும்போதெல்லாம், (தங்களுக்கு முன், அங்கு வந்துள்ள) தம் இனத்தாரைச் சபிப்பார்கள்; அவர்கள் யாவரும் நரகத்தையடைந்து விட்ட பின்னர், பின் வந்தவர்கள் முன் வந்தவர்களைப்பற்றி, "எங்கள் இறைவனே! இவர்கள் தான் எங்களை வழி கெடுத்தார்கள்; ஆதலால் இவர்களுக்கு நரகத்தில் இரு மடங்கு வேதனையைக் கொடு" என்று சொல்வார்கள். அவன் கூறுவான்; "உங்களில் ஒவ்வொருவருக்கும் இரட்டிப்பு (வேதனை) உண்டு - ஆனால் நீங்கள் அதை அறியமாட்டீர்கள்."

[7:39]

அவர்களில் முன் வந்தவர்கள், பின் வந்தவர்களை நோக்கி, "எங்களைவிட உங்களுக்கு யாதொரு மேன்மையும் கிடையாது, ஆதலால் நீங்களாகவே சம்பாதித்துக் கொண்ட (தீ) வினையின் காரணமாக நீங்களும் (இருமடங்கு) வேதனையை அனுபவியுங்கள்" என்று கூறுவார்கள்.

[7:40]

எவர்கள் நம் வசனங்களை பொய்ப்பித்து இன்னும் (அவற்றைப் புறக்கணித்து) பெருமையடித்தார்களோ நிச்சயமாக அவர்களுக்கு வானத்தின் (அருள்) வாயில்கள் திறக்கப்பட மாட்டா - மேலும் ஊசியின் காதில் ஒட்டகம் நுழையும் வரையில் அவர்கள் சுவனபதியில் நுழைய மாட்டார்கள் - இவ்வாறே குற்றம் செய்பவர்களுக்கு கூலி கொடுப்போம்.

[7:41]

அவர்களுக்கு நரகத்தில் (நெருப்பு) விரிப்புகளும், (போர்த்திக் கொள்வதற்கு) அவர்களுக்கு மேலே நெருப்புப் போர்வைகளும் உண்டு - இன்னும் இவ்வாறே அநியாயம் செய்பவர்களுக்கு நாம் கூலி கொடுப்போம்.

[7:42]

ஆனால், எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்கருமங்கள் செய்கிறார்களோ - எந்த ஓர் ஆத்மாவையும் அதன் சக்திக்குமீறி நாம் சிரமப்படுத்த மாட்டோம்; அவர்கள் சுவனவாசிகளாக இருப்பார்கள் - அவர்கள் அதிலேயே என்றென்றும் தங்கியிருப்பார்கள்.

[7:43]

தவிர (இவ்வுலகில் ஒருவர் மீது ஒருவர் கொண்டிருந்த) குரோதத்தையும் அவர்களுடைய இதயங்களிலிருந்து நீக்கி விடுவோம்; அவர்களுக்கு அருகில் ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும்; இன்னும் அவர்கள் கூறுவார்கள்; "இ(ந்த பாக்கியத்தைப் பெறுவ)தற்குரிய நேர்வழியை எங்களுக்குக் காட்டிய அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும் உரியதாகும்; அல்லாஹ் எங்களுக்கு நேர் வழி காட்டியிராவிட்டால், ஒருக்காலும் நாங்கள் நேர்வழி அடைந்திருக்கமாட்டோம் - நிச்சயமாக எங்கள் இறைவனுடைய தூதர்கள் உண்மை (மார்க்கத்தை)யே (நம்மிடம்) கொண்டு வந்தார்கள்" (இதற்கு பதிலாக, "பூமியில்) நீங்கள் செய்து கொண்டிருந்த (நன்மையான) காரியங்களின் காரணமாகவே நீங்கள் இந்த சுவனபதியின் வாரிசுகளாக்கப்பட்டு இருக்கிறீர்கள்" என்று அழைக்கப்படுவார்கள்.