[7:68]

நான் என் இறைவனுடைய தூதையே உங்களிடம் எடுத்துக் கூறுகின்றேன். மேலும் நான் உங்களுக்கு நம்பிக்கையான உபதேசியாகவும் இருக்கின்றேன் (என்று கூறினார்).

[7:69]

உங்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்வதற்காக உங்களிலுள்ள ஒரு மனிதருக்கு உங்கள் இறைவனிடமிருந்து நற்போதனை வந்துள்ளது பற்றி நீங்கள் ஆச்சரியப்படுகிறீர்களா? நூஹுடைய சமூகத்தாருக்குப் பின்னர் அவன் உங்களைப் பூமியில் பின்தோன்றல்களாக்கி வைத்து, உங்கள் உடலில் பலத்தையும் அதிகமாக்கியதை நினைவு கூறுங்கள் - எனவே அல்லாஹ்வின் அருட்கொடைகளை எல்லாம் நினைத்துப் பாருங்கள்; நீங்கள் வெற்றி பெறுவீர்கள் (என்றும் கூறினார்)

[7:70]

அதற்கு அவர்கள் " எங்கள் மூதாதையர்கள் வழிபட்ட தெய்வங்களை விட்டு விட்டு; அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும் என்பதற்காகவா நீர் எங்களிடம் வந்திருக்கிறீர்? நீர் உண்மையாளராக இருந்தால், நீர் அச்சுறுத்துவதை எம்மிடம் கொண்டுவாரும்" என்று கூறினார்கள்.

[7:71]

அதற்கு அவர், "உங்களுடைய இறைவனின் கோபமும், வேதனையும் உங்களுக்கு ஏற்பட்டுவிட்டன அல்லாஹ் எந்தவோர் ஆதாரத்தையும் இறக்கி வைக்காத நீங்களும் உங்களுடைய முன்னோர்களும் பெயர் சூட்டிக் கொண்டீர்களே அந்த பெயர்கள் விஷயத்திலேயா என்னிடத்திலே நீங்கள் தர்க்கம் செய்கிறீர்கள்; (எனவே உங்கள் வேதனையை) நீங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருங்கள்; நிச்சயமாக நானும் உங்களோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்" என்று கூறினார்.

[7:72]

ஆகவே, நாம் அவரையும் அவருடன் இருந்தவர்களையும், நம்முடைய அருளைக்கொண்டு காப்பற்றினோம்; நம் வசனங்களைப் பொய்யெனக்கூறி, நம்பிக்கை கொள்ளாமல் இருந்தவர்களை நாம் வேரறுத்து விட்டோம்.

[7:73]

ஸமூது' கூட்டதாரிடம், அவர்கள் சகோதரராகிய ஸாலிஹை (நம் தூதராக அனுப்பி வைத்தோம்); அவர் (அவர்களை நோக்கி) "என் சமூகத்தார்களே! அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி உங்களுக்கு வேறு நாயனில்லை இதற்காக, நிச்சயமாக உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து ஒரு தெளிவான அத்தாட்சியும் வந்துள்ளது அல்லாஹ்வுடைய இந்த ஒட்டகமானது உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக வந்துள்ளது எனவே இதை அல்லாஹ்வின் பூமியில் (தடையேதுமின்றி) மேய விடுங்கள் - அதை எத்தகைய தீங்கும் கொண்டு தீண்டாதீர்கள், அப்படிச்செய்தால் உங்களை நோவினை செய்யும் கடும் வேதனை பிடித்துக் கொள்ளும்" என்று கூறினார்.