[7:131]

அவர்களுக்கு ஒரு நன்மை வருமானால், "அது நமக்கு (உரிமையாக) வரவேண்டியது தான்" என்று கூறினார்கள்; ஆனால் அவர்களுக்கு ஒரு கெடுதி ஏற்படுமானால், அது மூஸாவினாலும், அவருடனிருப்பவர்களாலும் வந்த பீடையென்பார்கள்; அறிந்து கொள்ளுங்கள்; அவர்களுடைய இந்த துர்பாக்கியமெல்லாம் அல்லாஹ்விடமிருந்தே வந்துள்ளது - எனினும் அவர்களில் பெரும்பாலோர் இதனை அறிந்து கொள்வதில்லை.

[7:132]

அவர்கள் மூஸாவிடம், "நீர் எங்களை வசியப்படுத்த எவ்வளவு அத்தாட்சிகளைக் கொண்டு வந்த போதிலும், நாங்கள் உம்மை நம்பக்கூடியவர்களாக இல்லை" என்று கூறினார்கள்.

[7:133]

ஆகவே அவர்கள் மீது, கனமழையையும், வெட்டுக்கிளியையும், பேனையும், தவளைகளையும், இரத்தத்தையும் தெளிவான அத்தாட்சிகளாக (ஒன்றன்பின் ஒன்றாக) அனுப்பி வைத்தோம் - ஆனால் அவர்கள் பெருமையடித்து குற்றம் புரியும் சமூகத்தாராகவே ஆகியிருந்தனர்.

[7:134]

தங்கள் மீது வேதனை ஏற்பட்ட போதெல்லாம் அவர்கள் "மூஸாவே! உம் இறைவன் உமக்கு அளித்திருக்கும் வாக்குறுதியின்படி எங்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக! எங்களை விட்டும் இவ் வேதனையை நீர் நீக்கி விட்டால், நிச்சயமாக நாங்கள் உம்மீது நம்பிக்கை கொண்டு இஸ்ரவேலர்களை உம்முடன் மேலும் நிச்சயமாக அனுப்பி விடுகிறோம்" என்று கூறினார்கள.

[7:135]

அவர்கள் அடைந்துவிடக்கூடிய ஒரு தவணை வரை வேதனையை அவர்களை விட்டும் நாம் நீக்கியபோது அவர்கள் மாறு செய்தே வந்தனர்.

[7:136]

ஆகவே, அவர்கள் நம் அத்தாட்சிகளைப் பொருட்படுத்தாமல்; அவற்றைப் பொய்ப்பித்துக் கொண்டு இருந்ததால், அவர்களைக் கடலில் மூழ்கடித்து அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்.

[7:137]

எனவே, எவர்கள் சக்தி குறைந்தவர்களாகக் கருதப்பட்டார்களோ அந்த இஸ்ரவேலர்களைக் கிழக்கிலும் மேற்கிலுமுள்ள நிலப்பகுதிகளின் அதிபதிகளாக்கினோம்; இன்னும் அவற்றிலே பெரும் பாக்கியங்களையும் அளித்தோம். இஸ்ராயீலின் மக்கள் பொறுமையாகவும், உறுதியாகவும் இருந்த காரணத்தால், அவர்கள் மீது உம் இறைவனுடைய அழகிய வாக்குப் பரிபூரணமாகி நிறைவேறிற்று மேலும் ஃபிர்அவ்னும் அவனுடைய சமூகத்தாரும் உண்டுபண்ணியிருந்தவற்றையும், கட்டியிருந்த மாடமாளிகைகளையும் நாம் தரைமட்டமாக்கி விட்டோம்.