[7:179]

நிச்சயமாக நாம் ஜின்களிலிருந்தும், மனிதர்களிலிருந்தும் அநேகரை நரகத்திற்கென்றே படைத்துள்ளோம்; அவர்களுக்கு இருதயங்கள் இருக்கின்றன - ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் நல்லுணர்வு பெற மாட்டார்கள்; அவர்களுக்குக் கண்கள் உண்டு; ஆனால், அவற்றைக் கொண்டு அவர்கள் (இறைவனின் அத்தாட்சிகளைப்) பார்ப்பதில்லை அவர்களுக்குக் காதுகள் உண்டு. ஆனால் அவற்றைக் கொண்டு அவர்கள் (நற்போதனையைக்) கேட்கமாட்டார்கள் - இத்தகையோர் கால்நடைகளைப் போன்றவர்கள். இல்லை! அவற்றை விடவும் வழி கேடர்கள்; இவர்கள் தாம் (நம்வசனங்களை) அலட்சியம் செய்தவர்களாவார்கள்.

[7:180]

அல்லாஹ்வுக்கு அழகிய திருநாமங்கள் இருக்கின்றன் அவற்றைக் கொண்டே நீங்கள் அவனைப் பிரார்த்தியுங்கள், அவனுடைய திருநாமங்களை தவறாக பயன்படுத்துவோர்களை (புறக்கணித்து) விட்டு விடுங்கள் - அவர்களுடைய செயல்களுக்காக அவர்கள் (தக்க) கூலி கொடுக்கப்படுவார்கள்.

[7:181]

நாம் படைத்தவர்களில் ஒரு கூட்டத்தார் இருக்கின்றார்கள். அவர்கள் சத்திய வழியைக் காட்டுகிறார்கள்; அதைக் கொண்டு நீதியும் செலுத்துகிறார்கள்.

[7:182]

எவர் நம் வசனங்களைப் பொய்யெனக் கூறுகிறார்களோ அவர்களைப் படிப்படியாக அவர்கள் அறியா வண்ணம் பிடிப்போம்.

[7:183]

(இவ்வுலகில்) நான் அவர்களுக்கு அவகாசம் கொடுக்கின்றேன்; நிச்சயமாக எனது திட்டம் மிகவும் உறுதியானது.

[7:184]

அவர்கள் சிந்திக்கவில்லையா? (நம் தூதராகிய) அவர்களுடைய தோழருக்கு எவ்வித பைத்தியமுமில்லை. அவர் பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிக்கை செய்பவரேயன்றி வேறில்லை.

[7:185]

வானங்கள், பூமி, இவற்றின் ஆட்சியையும் அல்லாஹ் படைத்திருக்கும் மற்றப் பொருள்களையும் அவர்கள் நோட்டமிடவில்லையா? அவர்களுடைய (மரண) தவணை நெருங்கியிருக்கக்கூடும் என்பதையும் (அவர்கள் சிந்திக்கவில்லையா?) இதற்குப் பின்னர் எந்த விஷயத்தைத் தான் அவர்கள் ஈமான் கொள்ளப்போகிறார்கள்?

[7:186]

எவர்களை அல்லாஹ் தவறான வழியில் விட்டு விடுகிறானோ அவர்களை நேரான வழியில் செலுத்த எவராலும் முடியாது. அவன் அவர்களை தவறான வழியிலேயே தட்டழியுமாறு விட்டுவிடுகிறான்.

[7:187]

அவர்கள் உம்மிடம் இறுதித் தீர்ப்பு நாள் எப்பொழுது வரும் என்று வினவுகிறார்கள்; நீர் கூறும்; "அதன் அறிவு என் இறைவனிடத்தில் தான் இருக்கிறது அது வரும் நேரத்தை அவனைத் தவிர வேறு எவரும் வெளிப்படுத்த இயலாது - அது வானங்களிலும், பூமியிலும் பெரும் பளுவான சம்பவமாக நிகழும்; திடுகூறாக அது உங்களிடம் வரும்; அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மைக் கருதியே அவர்கள் உம்மைக் கேட்கிறார்கள்; அதன் அறிவு நிச்சயமாக அல்லாஹ்விடமே இருக்கின்றது - எனினும் மனிதர்களில் பெரும் பாலோர் அதை அறிய மாட்டார்கள்" என்று கூறுவீராக.