[8:9]

(நினைவு கூறுங்கள்;) உங்களை இரட்சிக்குமாறு உங்கள் இறைவனின் உதவியை நாடியபோது "(அணி அணியாக உங்களைப்) பின்பற்றி வரக்கூடிய ஓராயிரம் மலக்குகளைக் கொண்டு நிச்சயமாக உங்களுக்கு உதவி புரிவேன்" என்று இறைவன் உங்களுக்கு பதிலளித்தான்.

[8:10]

உங்கள் இருதயங்கள் திருப்தியடைவதற்காகவும், ஒரு நன்மாராயமாகவும் (இந்த வெற்றியை) அல்லாஹ் ஆக்கினான்; அல்லாஹ்விடமிருந்தே தவிர உதவி இல்லை நிச்சயமாக அல்லாஹ் மிகைத்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

[8:11]

(நினைவு கூறுங்கள்;) நீங்கள் அமைதியடைவதற்காக அவன் சிறியதொரு நித்திரை உங்களை பொதிந்து கொள்ளுமாறு செய்தான்; இன்னும் உங்களை அதன் மூலம் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தானின் தீய எண்ணங்களை உங்களைவிட்டு நீக்குவதற்காகவும், உங்கள் இருதயங்களைப் பலப்படுத்தி, உங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவதற்காகவும், அவன் உங்கள் மீது வானிலிருந்து மழை பொழியச் செய்தான்.

[8:12]

(நபியே!) உம் இறைவன் மலக்குகளை நோக்கி; "நிச்சயமாக நான் உங்களுடன் இருக்கிறேன்; ஆகவே, நீங்கள் முஃமின்களை உறுதிப்படுத்துஙகள்; நிராகரிப்போரின் இருதயங்களில் நான் திகிலை உண்டாக்கி விடுவேன்; நீங்கள் அவர்கள் பிடரிகளின் மீது வெட்டுங்கள்; அவர்களுடைய விரல் நுனிகளையும் வெட்டி விடுங்கள்" என்று (வஹீ மூலம்) அறிவித்ததை நினைவு கூறும்.

[8:13]

இதற்கு காரணம்; நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும் விரோதம் செய்தார்கள். எவர் அல்லாஹ்வுக்கும், அவன் தூதருக்கும் விரோதம் செய்வாரோ - நிச்சயமாக அல்லாஹ் கடினமாகத் தண்டனை செய்பவனாக இருக்கிறான்.

[8:14]

இதை(தண்டனையை)ச் சுவையுங்கள்; நிச்சயமாக காஃபிர்களுக்கு நரக வேதனையுண்டு என்று (நிராகரிப்போருக்குக்) கூறப்படும்.

[8:15]

நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நிராகரிப்போரைப் (போரில்) ஒன்று திரண்டவர்களாக சந்தித்தால் அவர்களுக்கு புறமுதுகு காட்டாதீர்கள்.

[8:16]

(எதிரிகளை) வெட்டுவதற்காகவோ அல்லது (தம்) கூட்டத்தாருடன் சேர்ந்து கொள்வதற்காகவோயன்றி, அந்நாளில் எவரேனும் தம் புறமுதுகைக் காட்டித் திரும்புவாரானால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வின் கோபத்திற்கு உள்ளாகி விடுவார் - அவர் தங்குமிடம் நரகமே இன்னும் அது மிகவும் கெட்ட தங்குமிடம்.