[8:17]

(பத்ரு போரில்) எதிரிகளை வெட்டியவகள் நீங்கள் அல்ல - அல்லாஹ் தான் அவர்களை வெட்டினான்; (பகைவர்கள் மீது மண்ணை) நீர் எறிந்தபோது அதனை நீர் எறியவில்லை, அல்லாஹ்தான் எறிந்தான்; முஃமின்களை அழகான முறையில் சோதிப்பதற்காகவே அல்லாஹ் இவ்வாறு செய்தான்; நிச்சயமாக அல்லாஹ் (எல்லாவற்றையும்) செவி ஏற்பவனாகவும், (எல்லாம்) அறிபவனாகவும் இருக்கின்றான்.

[8:18]

இன்னும், நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்போரின் சூழ்ச்சியை இழிவாக்கி (சக்தியற்றதாய்) ஆக்குவதற்கும் (இவ்வாறு செய்தான்.)

[8:19]

(நிராகரிப்பவர்களே!) நீங்கள் வெற்றி(யின் மூலம் தீர்ப்பைத்) தேடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக அவ்வெற்றி (முஃமின்களுக்கு) வந்து விட்டது இனியேனும் நீங்கள் (தவறை விட்டு) விலகிக் கொண்டால் அது உங்களுக்கு நலமாக இருக்கும்; நீங்கள் மீண்டும் (போருக்கு) வந்தால் நாங்களும் வருவோம்; உங்களுடைய படை எவ்வளவு அதிகமாக இருந்தாலும், அது உங்களுக்கு எத்தகைய பலனையும் அளிக்காது. மெய்யாகவே அல்லாஹ் முஃமின்களோடு தான் இருக்கின்றான் (என்று முஃமின்களே கூறி விடுங்கள்).

[8:20]

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரை புறக்கணிக்காதீர்கள்.

[8:21]

(மனப்பூர்வமாகச்) செவியேற்காமல் இருந்துகொண்டே, "நாங்கள் செவியுற்றோம்" என்று (நாவால் மட்டும்) சொல்கின்றவர்களைப் போன்று நீங்கள் ஆகிவிடாதீர்கள்.

[8:22]

நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் உயிர்ப்பிராணிகளில் மிக்க கேவலமானவர்கள் (உண்மையை) அறிந்து கொள்ளாச் செவிடர்களும் ஊமைகளும் தாம்.

[8:23]

அவர்களிடத்தில் ஏதேனும் நன்மை உண்டு என அல்லாஹ் அறிந்திருந்தால், அவன் அவர்களைச் செவியேற்குமாறு செய்திருப்பான்; (அவர்கள் இருக்கும் நிலையில்) அவன் அவர்களைச் செவியேற்கச் செய்தாலும் அவர்கள் புறக்கணித்து மாறியிருப்பார்கள்.

[8:24]

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வும், அவன் தூதரும் உங்களை உங்களுக்கு உயிர் அளிக்கக்கூடிய காரியத்தின்பால் அழைத்தால் நீங்கள் அவர்களுக்கு பதிலளியுங்கள்; இன்னும், மெய்யாகவே அல்லாஹ் மனிதனுக்கும் அவன் இருதயத்திற்குமிடையேயும் ஆதிக்கம் செலுத்துகிறான் என்பதையும், அவனிடத்திலேயே நீங்கள் ஒன்று சேர்க்கப் படுவீர்கள் என்பதையும் (உறுதியாக) அறிந்து கொள்ளுங்கள்.

[8:25]

நீங்கள் வேதனைக்கு பயந்து கொள்ளுங்கள்; அது உங்களில் அநியாயம் செய்தவர்களை மட்டும்தான் குறிப்பாகப் பிடிக்கும் என்பதில்லை - நிச்சயமாக அல்லாஹ் தண்டனை அளிப்பதில் கடுமையானவன் என்பதையும் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.