[9:14]

நீங்கள் அவர்களுடன் போர் புரியுங்கள்; உங்களுடைய கைகளைக் கொண்டே அல்லாஹ் அவர்களுக்கு வேதனையளித்து அவர்களை இழிவு படுத்தி, அவர்களுக்கெதிராக அவன் உங்களுக்கு உதவி (செய்து அவர்கள் மேல் வெற்றி கொள்ளச்) செய்வான். இன்னும் முஃமின்களின் இதயங்களுக்கு ஆறுதலும் அளிப்பான்.

[9:15]

அவர்களுடைய இதயங்களிலுள்ள கோபத்தையும் போக்கி விடுவான்; தான் நாடியவரின் தவ்பாவை (மன்னிப்புக் கோருதலை) ஏற்றுக் கொள்கிறான். அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், (பூரண) ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

[9:16]

(முஃமின்களே!) உங்களில் யார் (அல்லாஹ்வின் பாதையில்) போர் செய்தனர் என்பதையும்; அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும், முஃமின்களையும் தவிர (வேறு எவரையும்) அந்தரங்க நண்பர்களாக ஆக்கிக் கொள்ளவில்லை என்பதையும், அல்லாஹ் (உங்களைச் சோதித்து) அறியாத நிலையில், நீங்கள் விட்டுவிடப் படுவீர்கள் என்று நினைக்கிறீர்களா? அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை(யெல்லாம் நன்கு) அறிந்தவனாகவே இருக்கின்றான்.

[9:17]

'குஃப்ரின்' மீது தாங்களே சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும், இந்த முஷ்ரிக்குகளுக்கு அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்ய உரிமையில்லை அவர்களுடைய (நற்)கருமங்கள் (யாவும் பலன் தராது) அழிந்துவிட்டன - அவர்கள் என்றென்றும் நரகத்தில் தங்கிவிடுவார்கள்.

[9:18]

அல்லாஹ்வின் மஸ்ஜிதுகளைப் பரிபாலனம் செய்யக்கூடியவர்கள், அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு தொழுகையைக் கடைப்பிடித்து ஜக்காத்தை (முறையாகக்) கொடுத்து அல்லாஹ்வைத் தவிர வேறெதற்கும் அஞ்சாதவர்கள்தாம் - இத்தகையவர்கதாம் நிச்சயமாக நேர் வழி பெற்றவர்களில் ஆவார்கள்.

[9:19]

(ஈமான் கொள்ளாத நிலையில்) ஹாஜிகளுக்குத் தண்ணீர் புகட்டுவோரையும் கஃபத்துல்லாவை (புனிதப்பள்ளியை) நிர்வாகம் செய்வோரையும் அல்லாஹ்வின் மீதும் இறுதிநாள் மீதும் ஈமான் கொண்டு, அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிந்தோருக்குச் சமமாக ஆக்கிவிட்டீர்களா? அல்லாஹ்வின் சமூகத்தில் (இவ்விருவரும்) சமமாக மாட்டார்கள் - அநியாயக்காரர்களை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.

[9:20]

எவர்கள் ஈமான் கொண்டு, தம் நாட்டை விட்டும் வெளியேறித் தம் செல்வங்களையும் உயிர்களையும் தியாகம் செய்து அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் செய்தார்களோ, அவர்கள் அல்லாஹ்விடம் பதவியால் மகத்தானவர்கள் மேலும் அவர்கள்தாம் வெற்றியாளர்கள்.