[9:27]

அல்லாஹ் இதற்குப் பின்னர், தான் நாடியவருக்கு (அவர்கள் மனந்திருந்தி மன்னிப்புக் கோரினால்) மன்னிப்பளிக்கின்றான்; அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாகவும், கிருபை செய்பவனாகவும் இருக்கின்றான்.

[9:28]

ஈமான் கொண்டவர்களே! நிச்சயமாக இணை வைத்து வணங்குவோர் அசுத்தமானவர்களே ஆதலால், அவர்களின் இவ்வாண்டிற்குப் பின்னர் சங்கை மிகுந்த இப் பள்ளியை (கஃபத்துல்லாஹ்வை) அவர்கள் நெருங்கக் கூடாது (அதனால் உங்களுக்கு) வறுமை வந்து விடுமோ என்று நீங்கள் பயந்தீர்களாயின் - அல்லாஹ் நாடினால் - அவன் அதி சீக்கிரம் அவன் தன் அருளால் உங்களைச் செல்வந்தர்களாக்கி விடுவான் - நிச்சயமாக அல்லாஹ் (எல்லாம்) அறிந்தவனாகவும், ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்.

[9:29]

வேதம் அருளப்பெற்றவர்களில் எவர்கள் அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கௌ;ளாமலும், அல்லாஹ்வும், அவனுடைய தூதரும் ஹராம் ஆக்கியவற்றை ஹராம் எனக் கருதாமலும், உண்மை மார்க்கத்தை ஒப்புக் கொள்ளாமலும் இருக்கிறார்களோ. அவர்கள் (தம்) கையால் கீழ்ப்படிதலுடன் ஜிஸ்யா (என்னும் கப்பம்) கட்டும் வரையில் அவர்களுடன் போர் புரியுங்கள்.

[9:30]

யூதர்கள் (நபி) உஜைரை அல்லாஹ்வுடைய மகன் எள்று கூறுகிறார்கள்; கிறிஸ்தவர்கள் (ஈஸா) மஸீஹை அல்லாஹ்வுடைய மகன் என்று கூறுகிறார்கள்; இது அவர்கள் வாய்களால் கூறும் கூற்றேயாகும்; இவர்களுக்கு, முன்னிருந்த நிராகரிப்போரின் கூற்றுக்கு இவர்கள் ஒத்துப்போகிறார்கள்; அல்லாஹ் அவர்களை அழிப்பானாக! எங்கே திருப்பப்படுகிறார்கள்?

[9:31]

அவர்கள் அல்லாஹ்வை விட்டும் தம் பாதிரிகளையும், தம் சந்நியாசிகளையும் மர்யமுடைய மகனாகிய மஸீஹையும் தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர்; ஆனால் அவர்களே ஒரே இறைவனைத் தவிர (வேறெவரையும்) வணங்கக்கூடாதென்றே கட்டளையிடப்பட்டுள்ளார்கள்; வணக்கத்திற்குரியவன் அவனன்றி வேறு இறைவன் இல்லை - அவன் அவர்கள் இணைவைப்பவற்றை விட்டும் மிகவும் பரிசுத்தமானவன்.