[9:41]

நீங்கள் சொற்ப(மான போர்த் தளவாட)ங்களைக் கொண்டிருந்தாலும் சரி, நிறைய(ப் போர்த் தளவாடங்களைக்) கொண்டிருந்தாலும் சரி, நீங்கள் புறப்பட்டு, உங்கள் பொருட்களையும், உயிர்களையும் கொண்டு அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரியுங்கள் - நீங்கள் அறிந்தவர்களாக இருந்தால், இதுவே உங்களுக்கு மிகவும் நல்லது.

[9:42]

(நபியே! போர்ப் பிராயாணம்) நடுத்தரமான பிரயாணமாகவும் (அதில் கிடைக்கும் வெற்றிப் பொருள்கள்) எளிதில் (பெறப்படும் வெற்றிப்) பொருளாகவும் இருந்தால் அவர்கள் உம்மைப் பின்பற்றியிருப்பார்கள். எனினும் (போர்க்)களம் தூரமாக இருக்கின்றது. நாங்கள் சக்தி பெற்றிருந்தால் உங்களுடன் புறப்பட்டிருப்போம் என்று அல்லாஹ்வின் மீது ஆணையிடுகிறார்கள். அவர்கள் தங்களையே அழித்துக் கொள்கின்றனர், நிச்சயமாக அவர்கள் பொய்யர்கள் என்பதை அல்லாஹ் அறிவான்.

[9:43]

(நபியே!) அல்லாஹ் உம்மை மன்னித் தருள்வானாக! அவர்களில் உண்மை சொன்னவர்கள் யார், பொய்யர்கள் யார் என்பதை நீர் தெளிவாக அறிவதற்குமுன் ஏன் அவர்களுக்கு (போருக்கு புறப்படாதிருக்க) அனுமதியளித்தீர்கள்?

[9:44]

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஈமான் கொண்டவர்கள், தங்கள் பொருட்களையும் உயிர்களையும் அர்ப்பணம் செய்து, போர் புரியாமலிருக்க உம்மிடம் அனுமதி கேட்கவேமாட்டார்கள் - பயபக்தியுடையவர்களை அல்லாஹ் நன்கு அறிவான்.

[9:45]

(போரில் கலந்துகொள்ளாதிருக்க) உம்மிடம் அனுமதி கேட்பவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் மீதும், இறுதிநாள் மீதும் ஈமான் கொள்ளாதவர்கள்தாம்; அவர்களுடைய இருதயங்கள் தங்கள் சந்தேகத்திலேயே இருக்கின்றன ஆகவே, அவர்கள் தம் சந்தேகங்களினாலே (இங்குமங்கும்) உழலுகின்றனர்.

[9:46]

அவர்கள் (போருக்குப்) புறப்பட நாடியிருந்தால், அதற்கு வேண்டிய தயாரிப்புகளைச் செய்திருப்பார்கள்; எனினும் அவர்கள் புறப்படுவதை அல்லாஹ் வெறுத்து, அவர்கள் புறப்படாதவாறு தடை செய்துவிட்டான்; (போரில் கலந்து கொள்ள முடியாப் பெண்கள், முதியவர்களைப்போல்) "தங்குபவர்களுடன், நீங்களும் தங்கிவிடுங்கள்" என்று (அவர்களுக்கு) கூறப்பட்டது.

[9:47]

உங்களோடு அவர்கள் புறப்பட்டிருந்தால் குழப்பத்தைத் தவிர (வேறெதையும்) உங்களுக்கு அவர்கள் அதிகப்படுத்தியிருக்க மாட்டார்கள், மேலும் உங்களுக்கிடையே கோள்மூட்டி இருப்பார்கள். குழப்பத்தையும் உங்களுக்கு விரும்பியிருப்பார்கள். அவர்களின் (கூற்றை) செவியேற்பவர்களும் உங்களில் இருக்கிறார்கள்; அல்லாஹ் அநியாயக்காரர்களை அறிந்தவனாக இருக்கிறான்.