[9:73]

நபியே! காஃபிர்களுடனும், முனாஃபிக்குகளுடனும் நீர் அறப்போர் செய்வீராக மேலும் அவர்களை கண்டிப்பாக நடத்துவீராக (மறுமையில்) அவர்களுடைய புகலிடம் நரகமே - தங்குமிடங்களிலெல்லாம் அது மிகவும் கெட்டது.

[9:74]

இவர்கள் நிச்சமயாக 'குஃப்ருடைய' சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள்; அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர்; அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருட்கொடையினால் அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா (இவ்வாறு) பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும்; ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை.

[9:75]

அவர்களில் சிலர், "அல்லாஹ் தன் அருட்கொடையிலிருந்து நமக்கு(ச் செல்வத்தை) அளித்ததால் மெய்யாகவே நாம் (தாராளமான தான) தர்மங்கள் செய்து, நல்லடியார்களாகவும் ஆகிவிடுவோம்" என்று அல்லாஹ்விடம் வாக்குறுதி செய்தார்கள்.

[9:76]

(அவ்வாறே) அவன் அவர்களுக்குத் தன் அருட்கொடையிலிருந்து வழங்கியபோது, அதில் அவர்கள் உலோபித்தனம் செய்து, அவர்கள் புறக்கணித்தவர்களாக பின் வாங்கிவிட்டனர்.

[9:77]

எனவே, அவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதிக்கு மாறு செய்ததாலும்; அவர்கள் பொய் சொல்லிக் கொண்டே இருந்ததினாலும் அல்லாஹ், அவர்களுடைய உள்ளங்களில் தன்னைச் சந்திக்கும் (இறுதி) நாள் வரையில் நயவஞ்சகத்தைப் போட்டுவிட்டான்.

[9:78]

அவர்களுடைய இரகசிய எண்ணங்களையும், அவர்களுடைய அந்தரங்க ஆலோசனைகளையும் அல்லாஹ் அறிவான் என்பதையும்; இன்னும், மறைவானவற்றை எல்லாம் நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாக இருக்கின்றான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா,

[9:79]

இ(ம் முனாஃபிக்கான)வர்கள் முஃமின்களில் தாராளமாக தர்மம் செய்பவர்களையும் (வேறு பொருள் எதுவுமில்லாததால்) தங்கள் உழைப்பை தானமாகக் கொடுப்பவர்களையும் குறை கூறி, ஏளனமும் செய்கிறார்கள். இவர்களை அல்லாஹ் ஏளனம் செய்கிறான். இவர்களுக்கு நோவினை தரும் வேதனையும் உண்டு.