[2:127]

இப்ராஹீமும், இஸ்மாயீலும் இவ்வீட்டின் அடித்தளத்தை உயர்த்திய போது, "எங்கள் இறைவனே! எங்களிடமிருந்து (இப்பணியை) ஏற்றுக் கொள்வாயாக, நிச்சயமாக நீயே (யாவற்றையும்) கேட்பவனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றாய்" (என்று கூறினர்).

[2:128]

எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்.

[2:129]

எங்கள் இறைவனே! அவர்களிடையே உன்னுடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுத்து, அவர்களைத் தூய்மைப்படுத்தக் கூடிய ஒரு தூதரை அவர்களிலிருந்தே எழுந்திடச் செய்வாயாக - நிச்சயமாக நீயே வல்லமை மிக்கோனாகவும், பெரும் ஞானமுடையோனாகவும் இருக்கின்றாய்.

[2:130]

இப்ராஹீமுடைய மார்க்கத்தைப் புறக்கணிப்பவன் யார்?-தன்னைத் தானே தாழ்த்திக் கொள்பவனைத் தவிர. நிச்சயமாக நாம் அவரை(த் தூய்மையாளராக) இவ்வுலகில் தேர்ந்தெடுத்தோம்;. நிச்சயமாக அவர் மறுமையில் நல்லடியார் கூட்டத்திலேயே இருப்பார்.

[2:131]

இன்னும், அவரிடம் அவருடைய இறைவன்; "(என்னிடம் முற்றிலும் வழிபட்டவராகச்) சரணடையும்" என்று சொன்னபோது அவர், "அகிலங்களின் இறைவனுக்கு முற்றிலும் வழிபட்டோனாகச் சரணடைந்தேன்" என்று கூறினார்.

[2:132]

இதையே இப்ராஹீம் தம் குமாரார்களுக்கு வஸிய்யத்து (உபதேசம்) செய்தார்;. யஃகூபும் (இவ்வாறே செய்தார்); அவர் கூறினார்; "என் குமாரர்களே! அல்லாஹ் உங்களுக்குச் சன்மார்க்கத்தை (இஸ்லாமை) தேர்ந்தெடுத்துள்ளான். நீங்கள் முஸ்லிம்களாக அன்றி மரணிக்காதீர்கள்."

[2:133]

யஃகூபுக்கு மரணம் நெருங்கியபோது, நீங்கள் சாட்சியாக இருந்தீர்களா? அப்பொழுது அவர் தம் குமாரர்களிடம்; "எனக்குப் பின் நீங்கள் யாரை வணங்குவீர்கள்?" எனக் கேட்டதற்கு, "உங்கள் நாயனை-உங்கள் மூதாதையர் இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் நாயனை-ஒரே நாயனையே-வணங்குவோம்; அவனுக்கே(முற்றிலும்) வழிப்பட்ட முஸ்லிம்களாக இருப்போம்" எனக் கூறினர்.

[2:134]

அந்த உம்மத்து(சமூகம்) சென்றுவிட்டது, அவர்கள் சம்பாதித்தவை அவர்களுக்கே, நீங்கள் சம்பாதித்தவை உங்களுக்கே! அவர்கள் செய்து கொண்டிருந்தது பற்றி நீங்கள் கேட்கப்பட மாட்டீர்கள்.