[9:80]

ஏனென்றால் இவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்தார்கள் - இத்தகைய பாவிகளின் கூட்டத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்த மாட்டான்.

[9:81]

(தபூக் போரில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அல்லாஹ்வின் தூதருக்கு விரோதமாக(த் தம் வீடுகளில்) இருந்து கொண்டதைப் பற்றி மகிழ்ச்சியடைகின்றனர்; அன்றியும் அல்லாஹ்வின் பாதையில் தங்கள் பொருட்களையும், உயிர்களையும் அர்ப்பணம் செய்து போர் புரிவதையும் வெறுத்து (மற்றவர்களை நோக்கி); "இந்த வெப்ப (கால)த்தில் நீங்கள் (போருக்குச்) செல்லாதீர்கள்" என்றும் அவர்கள் கூறுகின்றனர். அவர்களிடம் "நரக நெருப்பு இன்னும் கடுமையான வெப்பமுடையது" என்று (நபியே!) நீர் கூறுவீராக. (இதை) அவர்கள் விளங்கியிருந்தால் (பின் தங்கியிருக்க மாட்டார்கள்).

[9:82]

எனவே அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்ததற்குக் கூலியாகக் குறைவாகவே சிரிக்கட்டும், அதிகமாக அழட்டும்.

[9:83]

(நபியே!) உம்மை அல்லாஹ் அவர்களில் ஒரு கூட்டத்தாரிடம் திரும்பி வருமாறு செய்து (உம் வெற்றியையும், பொருட்களையும் பார்த்துவிட்டு மறு யுத்தத்திற்குப்) புறப்பட்டு வர உம்மிடம் அனுமதி கோரினால், நீர் அவர்களிடம் "நீங்கள் ஒருக்காலும் என்னுடன் புறப்படாதீர்கள்; இன்னும் என்னுடன் சேர்ந்து எந்ந விரோதியுடனும் நீங்கள் போர் செய்யாதீர்கள். ஏனெனில் நீங்கள் முதன் முறையில் (போருக்குப் புறப்படாமல் தன் வீடுகளில்) உட்கார்ந்திருப்பதைத் தான் பொருத்தமெனக்கொண்டீர்கள் - எனவே (இப்பொழுதும் தம் இல்லங்களில்) தங்கியவர்களுடனேயே இருந்து விடுங்கள்" என்று கூறுவீராக!.

[9:84]

அவர்களில் யாராவது ஒருவர் இறந்து விட்டால் அவருக்காக நீர் ஒருக்காலும் (ஜனாஸா) தொழுகை தொழவேண்டாம்; இன்னும் அவர் கப்ரில் (பிரார்த்தனைக்காக) நிற்க வேண்டாம்; ஏனென்றால் நிச்சயமாக அவர்கள் அல்லாஹ்வையும், அவன் தூதரையும் நிராகரித்துப் பாவிகளாகவே இறந்தார்கள்.

[9:85]

இன்னும் அவர்களுடைய செல்வங்களும், பிள்ளைகளும் உம்மை ஆச்சரியப்படுத்த வேண்டாம்; நிச்சயமாக இவற்றைக் கொண்டு அவர்களை இவ்வுலகத்திலேயே வேதனை செய்யவும், அவர்கள் காஃபிர்களாக இருக்கும் நிலையிலேயே அவர்களின் உயிர் போவதையும் அல்லாஹ் விரும்புகிறான்.

[9:86]

மேலும், அல்லாஹ்வின் மீது ஈமான் கொண்டு, அவனுடைய தூதருடன் சேர்ந்து போர் புரியுங்கள்" என்று ஏதாவது ஓர் அத்தியாயம் இறக்கப்பட்டால், அவர்களில் வசதிபடைத்த செல்வந்தர்கள்; "எங்களை விட்டு விடுங்கள்; நாங்கள் (போருக்கு வராமல்) தங்கியிருப்போருடன் இருந்து கொள்கின்றோம்" என்று உம்மிடம் அனுமதி கோருகின்றனர்.