[9:100]

இன்னும் முஹாஜிர்களிலும், அன்ஸார்களிலும், முதலாவதாக (ஈமான் கொள்வதில்) முந்திக்கொண்டவர்களிலும் பின் தொடர்ந்தவர்களும் இருக்கின்றார்களே அவர்கள் மீது அல்லாஹ் திருப்தி அடைகிறான்; அவர்களும் அவனிடம் திருப்தியடைகின்றார்கள்; அன்றியும் அவர்களுக்காக, சுவனபதிகளைச் சித்தப்படுத்தியிருக்கின்றான், அவற்றின் கீNழு ஆறுகள் ஓடிக்கொண்டிருக்கும், அவர்கள் அங்கே என்றென்றும் தங்கியிருப்பார்கள் - இதுவே மகத்தான வெற்றியாகும்.

[9:101]

உங்களைச் சுற்றியுள்ள கிராமப்புறத்தவர்களில் நயவஞ்சகர்களும் இருக்கிறார்கள்; இன்னும் மதீனாவில் உள்ளவர்களிலும் நயவஞ்சகத்தில் நிலைபெற்றுவிட்டவர்களும் இருக்கிறார்கள் - (நபியே!) அவர்களை நீர் அறிய மாட்டீர், நாம் அவர்களை நன்கறிவோம்; வெகுசீக்கிரத்தில் நாம் அவர்களை இருமுறை வேதனை செய்வோம் - பின்னர் அவர்கள் கடுமையான வேதனையின்பால் தள்ளப்படுவார்கள்.

[9:102]

வேறு சிலர் தம் குற்றங்களை ஒப்புக்கொள்கின்றனர்; ஆனால் அவர்கள் (அறியாது நல்ல) ஸாலிஹான காரியத்தைக் கெட்டகாரியத்துடன் சேர்த்து விடுகிறார்கள். ஒரு வேளை அல்லாஹ் அவர்களின் (தவ்பாவை ஏற்று) மன்னிக்கப் போதும், நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பவனாகவும், பெருங் கிருபையாளனாகவும் இருக்கின்றான்.

[9:103]

(நபியே!) அவர்களுடைய செல்வத்திலிருந்து தர்மத்திற்கானதை எடுத்துக் கொண்டு, அதனால் அவர்களை உள்ளும் புறமும் தூய்மையாக்குவீராக, இன்னும் அவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வீராக நிச்சயமாக உம்முடைய பிரார்த்தனை அவர்களுக்கு (சாந்தியும்), ஆறுதலும் அளிக்கும்; அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனகவும், அறிபவனாகவும் இருக்கின்றான்.

[9:104]

நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களிடமிருந்து தவ்பாவை - மன்னிப்புக் கோருதலை - ஒப்புக்கொள்கிறான் என்பதையும், (அவர்களுடைய) தர்மங்களை அங்கீகரிக்கிறான் என்பதையும் அவர்கள் அறியவில்லையா? மெய்யாகவே அல்லாஹ் தவ்பாவை ஏற்று அருள் புரிபவன்.

[9:105]

(நபியே! அவர்களிடம;) "நற் செயல்களைச் செய்யுங்கள்; திடனாக உங்கள் செயல்களை அல்லாஹ்வும் அவன் தூதரும், முஃமின்களும் பார்த்துக் கொண்டுதானிருப்பார்கள்; மேலும், இரகசியங்களையும், பரகசிங்களையும் அறியும் இறைவனிடத்தில் நீங்கள் மீட்டப்படுவீர்கள் - அப்பொழுது, அவன் நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு அறிவிப்பான்" என்று கூறும்.

[9:106]

அல்லாஹ்வின் உத்தரவை எதிர்ப்பர்க்கப்படுகின்ற மற்றும் சிலரும் இருக்கிறார்கள். (அல்லாஹ்) அவர்களை தண்டிக்கலாம் அல்லது அவர்களை மன்னிக்கலாம். அல்லாஹ் அறிந்தவன்; ஞானம் மிக்கவன்.