Yûnus

அனைத்துப்புகழும்,அகிலங்கள் எல்லாவற்றையும் படைத்து வளர்த்துப் பரிபக்குவப்படுத்தும் (நாயனான) அல்லாஹ்வுக்கே ஆகும்.

[10:1]

அலிஃப், லாம், றா. இவை ஞானம் நிறைந்த வேதத்தின் வசனங்களாகும்.

[10:2]

மனிதர்களை அச்சமூட்டி எச்சரிப்பதற்காகவும், ஈமான் கொண்டவர்களுக்கு அவர்களுடைய இறைவனிடம் நிச்சயமாகப் பெரும் பதவி கிடைக்கும் என்று நன்மாராயம் கூறுவதற்காகவும், அவர்களிலிருந்தே நாம் ஒரு மனிதருக்கு வஹீ அருள்கிறோம் என்பதில் மக்களுக்கு ஆச்சரியம் ஏற்பட்டு விட்டதா? காஃபிர்களோ, "நிச்சயமாக இவர் பகிரங்கமான சூனியக்காரரே" என்று கூறுகின்றனர்.

[10:3]

நிச்சயமாக உங்கள் இறைவன் அல்லாஹ்வே; அவன் வானங்களையும் பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான் - பின்னர் தன் ஆட்சியை அர்ஷின் மீது அமைத்தான்; (இவை சம்பந்நப்பட்ட) அனைத்துக் காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகின்றான். அவனுடைய அனுமதிக்குப் பின்னரேயன்றி (அவனநிடம்) பரிந்து பேசபவர் எவருமில்லை. இத்தகைய (மாட்சிமை மிக்க) அல்லாஹ்வே உங்களைப் படைத்துப் பரிபக்குவப் படுத்துபவன், ஆகவே அவனையே வணங்குங்கள்; (நல்லுணர்ச்சி பெற இவை பற்றி) நீங்கள் சிந்திக்க வேண்டாமா?

[10:4]

நீங்கள் அனைவரும் அவனிடமே மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது; அல்லாஹ்வின் வாக்குறுதி மெய்யானது - நிச்சயமாக அவன்தான் முதல் முறையாகப் படைத்தவன்; ஈமான் கொண்டு நேர்மையான முறையில் நற்கருமங்கள் செய்தவர்களுக்கு கூலி வழங்குவதற்காக படைப்பினங்களை மீ;ண்டும் உயிர்ப்பிப்பான். யார் நிராகரித்து விட்டார்களோ அவர்களுக்கு அவர்கள் நிராகரித்த காரணத்தினால் கொதிக்கும் நீரும் நோவினைத் தரும் வேதனையும் உண்டு.

[10:5]

அவன்தான் சூரியனைச் (சடர்விடும்) பிரகாசமாகவும், சந்திரணை ஒளிவுள்ளதாகவும் ஆக்கினான். ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக்கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு(ச் சந்திரனாகிய) அதற்கு மாறி மாறி வரும் பல படித்தரங்களை உண்டாக்கினான்; அல்லாஹ் உண்மை(யாக தக்க காரணம்) கொண்டேயல்லாது இவற்றைப் படைக்கவில்லை - அவன் (இவ்வாறு) அறிவுள்ள மக்களுக்குத் தன் அத்தாட்சிகளை விவிரிக்கின்றான்.

[10:6]

நிச்சயமாக இரவும், பகலும் (ஒன்றன் பின் ஒன்றாக) மாறி வருவதிலும், வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ் படைத்துள்ள (அனைத்)திலும் பயபக்தியுள்ள மக்களுக்கு (நிரம்ப) அத்தாட்சிகள் இருக்கின்றன.