[10:15]

அவர்கள் மீது தெளிவான நம் வசனங்கள் ஓதிக் காண்பிக்கப்பட்டால், நம்முடைய சந்திப்பை நம்பாதவர்கள், "இது அல்லாத வேறு ஒரு குர்ஆனை நீர் கொண்டு வாரும்; அல்லது இதை மாற்றிவிடும்" என்று கூறுகிறார்கள். அதற்கு "என் மனப் போக்கின்படி அதை நாம் மாற்றிவிட எனக்கு உரிமையில்லை, என் மீது வஹீயாக அறிவிக்கப்படுபவற்றைத் தவிர வேறெதையும் நான் பின்பற்றுவதில்லை, என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான நாளின் வேதனைக்கு (நான் ஆளாக வேண்டும் என்பதை) நான் நிச்சயமாக பயப்படுகிறேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.

[10:16]

(இதை நான் உஙக்ளுக்கு ஓதிக் காட்டக்கூடாது என்று) அல்லாஹ் நாடியிருந்தால், இதனை நான் உங்களிடம் ஓதிக் காண்பித்திருக்க மாட்டேன்; மேலும் அதைப் பற்றி உங்களுக்கு அவன் அறிவித்திருக்கமாட்டான்; நிச்சயமாக நாம் இதற்கு முன்னர் உங்களிடையே நீண்ட காலம் வசித்திருக்கிறேன் - இதை நீங்கள் விளங்கிக் கொள்ள வேண்டாமா? என்று (நபியே!) நீர் கூறுவீராக.

[10:17]

அல்லாஹ்வின் மீது பொய் கூறுபவன் அல்லது அவனுடைய வசனங்களைப் பொய்ப்பிக்க முற்படுபவன் - இவர்களைவிட மிக அநியாயம் செய்பவர் யார்? பாவம் செய்பவர்கள் நிச்சயமாக வெற்றியடைய மாட்டார்கள்.

[10:18]

தங்களுக்கு (யாதொரு) நன்மையோ தீமையோ செய்ய இயலாத அல்லாஹ் அல்லாதவற்றை (முஷ்ரிக்குகள்) வணங்குகிறார்கள்; இன்னும் அவர்கள், "இவை எங்களுக்கு அல்லாஹ்விடம் மன்றாட்டம் செய்பவை" என்றும் கூறுகிறார்கள்; அதற்கு நீர்; "வானங்களிலோ, பூமியிலோ அல்லாஹ் அறியாதவை (இருக்கின்றன என எண்ணிக் கொண்டு) நீங்கள் அவனுக்கு அறிவிக்கின்றீர்களா? அவன் மிகவும் பரிசத்தமானவன். அவர்கள் இறைவைப்பவற்றை விட மிகவும் உயர்ந்தவன்" என்று கூறும்.

[10:19]

மனிதர்கள் யாவரும் (ஆதியில்) ஒரே இனத்தவராகவே அன்றி வேறுல்லை; பின்னர் மாறுபட்டுக் கொண்டனர். உமது இறைவனிடமிருந்து (இம்மையின் கூலி மறுமையில் பூரணமாகக் கொடுக்கப்படும் என்ற) ஒரு வார்த்தை முந்தி ஏற்பட்டிருக்காவிட்டால் அவர்கள் எந்த விஷயத்தில் மாறுபட்டிருக்கின்றனரோ, அதைப்பற்றி அவர்களிடையே (இதற்குள்) முடிவு செய்யப்பட்டிருக்கும்.

[10:20]

மேலும் அவர்கள், இவர் மீது இவருடைய இறைவனிடமிருந்து (நாம் கோரும் ஏதேனும்) ஓர் அத்தாட்சி இறக்கப்பட வேண்டாமா? என்று கூறுகிறார்கள். அதற்கு "மறைவான விஷயங்கள் அல்லாஹ்வுக்கு மட்டுமே (தெரியும்). நீங்கள் எதிர்பார்த்திருங்கள். நிச்சமாக நானும் உங்களுடன் எதிர் பார்த்திருக்கிறேன்" என்று (நபியே!) நீர் கூறுவீராக.