[10:21]

மனிதர்களுக்கு ஏற்பட்ட துன்பங்களுக்குப்பின், அவர்களை (நம் ரஹ்மத்தை) கிருபையை - அனுபவிக்கும்படி நாம் செய்தால், உடனே அவர்கள் நமது வசனங்களில் கேலி செய்வதே அவர்களுக்கு (வழக்கமாக) இருக்கிறது; "திட்டமிடுவதில் அல்லாஹ்வே மிகவும் தீவிரமானவன்" என்று அவர்களிடம் (நபியே!) நீர் கூறும்; நிச்சயமாக நீங்கள் சூழ்ச்சி செய்து திட்டமிடுவதை யெல்லாம் எம் தூதர்கள் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள்.

[10:22]

அவனே உங்களைத் தரையிலும், கடலிலும் பயணம் செய்யவைக்கிறான்; (சில சமயம்) நீங்கள் கப்பலில் இருக்கும்போது - சாதகமான நல்ல காற்றினால் (கப்பலிலுள்ள) அவர்களைக் கப்பல்கள் (சமந்து) செல்லும்போது அவர்கள் மகிழ்ச்சியடைகிறார்கள்; பின்னர் புயல் காற்று வீசி எல்லாப்பக்கங்களிலிருந்தும் அலைகள் மோதும் போது, நிச்சயமாக (அலைகளால்) சூழப்பட்டோம் (தப்ப வழியில்லையே)" என்று எண்ணுகிறார்கள்; அச்சமயத்தில் தூய உள்ளத்துடன், "நீ எங்களை இதிலிருந்து காப்பாற்றி விட்டால், மெய்யாகவே நாங்கள் உனக்கு நன்றி செலுத்துபவர்களாக இருப்போம்" என்று அல்லாஹ்விடம் பிரார்த்திக்கின்றார்கள்.

[10:23]

அவன் அவர்களைக் காப்பாற்றி விட்டதும் அவர்கள் பூமியின் மேல் நியாயமில்லாது அழிச்சாட்டியம் செய்கிறார்கள்; மனிதர்களே! உங்கள் அழிச்சாட்டியங்கெல்லாம் உங்களுக்கே கேடாகமுடியும்; உலக வாழ்க்கையில் சிறுது சகம் அனுபவித்துக் கொண்டிருக்கிறீர்கள்; இதன் பின்னர் நம்மிடமே நீங்கள் திரும்ப வர வேண்டியதிருக்கிறது. அப்போது நீங்கள் செய்து கொண்டிருந்ததை உங்களுக்கு நாம் அறிவிப்போம்.

[10:24]

இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், நாம் வானத்திலிருந்து இறக்கிவைக்கும் நீரைப் போன்றது; (அதன் காரணமாக) மனிதர்களும் கால்நடைகளும் உண்ணக் கூடியவைகளிலிருந்து பூமியின் பயிர்கள் பல்வேளு வகைகளாகின்றனர்; முடிவில் பூமி (அந்த பயிர்கள் மூலம்) தன் அலங்காரத்தை பெற்று கவர்ச்சியடைந்த பொழுது அதன் சொந்தக்காரர்கள்; (கதிரை அறுவடை செய்து கொள்ளக்கூடிய) சக்தியுடையவர்கள் என்று தங்களை எண்ணிக்கொண்டிருந்தனர்; அச்சமயம் இரவிலோ பகலிலோ அதற்கு நம் கட்டளை வந்து (அதை நாம் அழித்து விட்டோம்). அது முந்திய நாள் (அவ்விடத்தில்) இல்லாதது போன்று அறுக்கப்பட்டதாக அதை ஆக்கிவிட்டோம். இவ்வாறே நாம் சிந்தனை செய்யும் மக்களுக்கு (நம்) அத்தாட்சிகளை விவரிக்கின்றோம்

[10:25]

மேலும் அல்லாஹ் (உங்களை) தாருஸ் ஸலாமை நோக்கி அழைக்கின்றான்; அவன் நாடியவரை நேர் வழியில் செலுத்துகிறான்.