[10:71]

மேலும் (நபியே!) நீர் அவர்களுக்கு நூஹ்வின் சரித்திரத்தை ஓதிக்காண்பிப்பீராக! அவர் தம் சமூகத்தாதை நோக்கி, "என் சமூகத்தாரே! நான் (உங்களிடையே) இருப்பதும் நான் (உங்களுக்கு) அல்லாஹ்வின் அத்தாட்சிகளை நினைவூட்டுவதும் உங்களுக்குப் பளுவாக இருக்குமானால் - நான் அல்லாஹ்வின் மீதே முழு நம்பிக்கை வைத்துள்ளேன்; (உங்கள் முயற்சியில் ஏதேனும்) குறைவு செய்து விட்டதாகப் பின்னர் உங்களுக்கு ஐயம் ஏற்படாதவாறு, நீங்கள் இணை வைப்பவற்றையும் ஒன்று சேர்த்துக் கொண்டு, நீங்கள் யாவரும் சேர்ந்து உங்கள் காரியத்தை முடிவு செய்யுங்கள் - பின்னர் (எனக்கெதிராக) நீங்கள் திட்டமிடுவதை என்னில் நிறைவேற்றுங்கள்; இதில் நீங்கள் தாமதம்செய்ய வேண்டாம்" என்று கூறினார்.

[10:72]

ஆனால், நிங்கள் (என் உபதேசத்தைப்) புறக்கணித்து விட்டால், (எனக்கு எவ்வித இழப்புமில்லை.) ஏனெனில் (இதற்காக) நான் உங்களிடம் யாதொரு கூலியும் கேட்கவில்லை; எனக்குரிய கூலி அல்லாஹ்விடமேயன்றி (வேறெவரிடத்தும்) இல்லை. நான் அவனுக்கு (முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லீம்களில் (ஒருவனாக) இருக்குமாறே நான் ஏவப்பட்டுள்ளேன் (என்று கூறினார்0.

[10:73]

அப்பொழுதும் அவர்கள் அவரைப் பொய்யரெனவே கூறினார்கள்; ஆகவே, நாம் அவரையும், அவருடன் இருந்தவர்களையும் கப்பலில் (ஏற்றிக்) காப்பாற்றினோம் - மேலும் அவர்களைப் (பூமிக்கு) அதிபதிகளாகவும் ஆக்கினோம் - நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்யெனக் கூறியவர்களை மூழ்கடித்தோம். அச்சமூட்டி எச்சரிக்கை செய்யப்பட்;ட அவர்களின் முடிவு என்ன ஆயிற்று என்பதை (நபியே!) நீர் கவனிப்பீராக.

[10:74]

அவருக்கு பின், அவ(ரவ)ர் சமூகத்தினருக்குத் தூதுவர்களை அனுப்பிவைத்தோம்; அவர்களும் தெளிவான அத்தாட்சிகளை அ(ச்சமூகத்த)வர்களிடம் கொண்டு வந்தார்கள்; எனினும், முன்னர் இருந்தவர்கள் எந்த (உண்மையைப்) பொய்யெனக் கூறிக் கொண்டிருந்தார்களோ, (அந்த உண்மையை) இவர்களும் நம்பவில்லை - வரம்பு மீறும் இத்தகையவர்களின் நெஞ்சங்கள் மீது இவ்hவறே நாம் முத்திரையிடுகிறோம்.

[10:75]

இதன் பின்னர் மூஸாவையும், ஹாரூனையும் ஃபிர்அவ்னிடமும், அவன் தலைவர்களிடமும் நம்முடைய அத்தாட்சிகளுடன் அனுப்பினோம்; ஆனால் இவர்களும் ஆணவம் கொண்டு குற்றவாளிகளான மக்களாகவே ஆனார்கள்.

[10:76]

நம்மிடமிருந்து அவர்களுக்குச் சத்தியம் வந்த போது, "நிச்சயமாக இது தெளிவான சூனியமே யாகும்" என்று கூறினார்கள்.

[10:77]

அதற்கு மூஸர் "உங்களிடம் சத்தியமே வந்த போது, அதைப்பற்றியோ நீங்கள் இவ்வாறு கூறுகிறீர்கள்? இதுவா சூனியம்? சூனியக்காரர்கள் வெற்றி பெறவே மாட்டார்கள்" என்று கூறினார்.

[10:78]

(அதற்கு) அவர்கள்; எங்கள் மூதாதையர்களை எதன் மீது நாங்கள் கண்டோமோ அதிலிருந்து எங்களைத் திருப்பிவிடவும், இந்த பூமியில் உங்கள் இருவருக்கும் பெருமையை உண்டாக்கிக் கொள்வதற்குமா நீங்கள் எங்களிடம் வந்தீர்கள்? ஆனால் நாங்கள் உங்களிருவர் மீதும் நம்பிக்கை கொள்பவர்களல்லர்" என்று கூறினார்கள்.