[11:63]

என் சமூகத்தாரே! நீங்கள் கவனித்தீர்களா? நான் என் இறைவனிடத்திலிருந்து தெளிவான அத்தாட்சியைப் பெற்றிருக்க, அவன் தன்னிடமிருந்து எனக்கு ரஹ்மத்தும் (அருளும்) வழங்கியிருக்க நான் அவனுக்கு மாறு செய்தால், அல்லாஹ்வை விட்டும் எனக்கு உதவி செய்பவர் யார்? நீங்களோ, எனக்கு இழப்பைத் தவிர வேறு எதையும் அதிகமாக்கி விடமாட்டீர்கள் என்று கூறினார்.

[11:64]

அன்றியும், என் சமூகத்தாரே! உங்களுக்கு ஓர் அத்தாட்சியாக, இதோ இது அல்லாஹ்வுடைய (ஒரு) பெண் ஒட்டகம்; ஆகவே, அல்லாஹ்வின் பூமியில் (எதேச்சையாக) அதை மேய விட்டு விடுங்கள்; எந்த விதமான தீங்கும் செய்யக்கருதி அதைத் தீண்டாதீர்கள்; (அப்படி நீங்கள் செய்தால்) அதிசீக்கிரத்தில் உங்களை வேதனை பிடித்துக் கொள்ளும் (என்று கூறினார்).

[11:65]

ஆனால் அவர்கள் அதனை கொன்று விட்டார்கள்; ஆகவே அவர் (அம்மக்களிடம்); "நீங்கள் உங்களுடைய வீடுகளில் மூன்று நாள்களுக்கு சகமனுபவியுங்கள்; (பின்னர் உங்களுக்கு அழிவு வந்துவிடும்.) இது பொய்ப்பிக்க முடியாத வாக்குறுதியாகும் என்று கூறினார்.

[11:66]

நமது கட்டளை வந்த போது ஸாலிஹையும் அவரோடு ஈமான் கொண்டவர்களையும் நமது அருளால் காப்பாற்றினோம். மேலும் அன்றைய நாளின் இழிவிலிருந்தும் (காப்பாற்றினோம்,) நிச்சயமாக உமது இறைவன் வல்லமை மிக்கவன்; மிகைத்தவன்.

[11:67]

அநியாயம் செய்து கொண்டிருந்தவர்களை (பயங்கரமான) பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது. அதனால் அவர்கள் தங்கள் வீடுகளிலேயே அழிந்து போய்க் கிடந்தனர்,

[11:68]

(அதற்குமுன்) அவர்கள் அவற்றில் (ஒரு காலத்திலும்) வசித்திருக்காததைப் போல் (அழிக்கப்பட்டனர்). நிச்சயமாக ஸமூது கூட்டதினர் தங்கள் இறைவனை நிராகரித்தனர் அறிந்து கொள்வீர்களாக! 'ஸமூது' (கூட்டத்தினர்)க்கு நாசம்தான்.

[11:69]

நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்றாஹீமுக்கு நற்செய்தி (கொண்டு வந்து) 'ஸலாம்' (சொன்னார்கள்; இப்றாஹீமும் "ஸலாம்" (என்று பதில்) சொன்னார்; (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை.

[11:70]

ஆனால், அவர்களுடைய கைகள் அதன் (உணவின்) பக்கம் செல்லாததைக் கண்டு, அவர் அவர்களைப் பற்றி ஐயப்பட்டார், அவர்கள் மீது அவருக்குப் பயமும் ஏற்பட்டுவிட்டது; (ஆனால்) அவர்களோ (அவரைப் பார்த்து) "பயப்படாதீர்! நிச்சயமாக நாங்கள் லூத்துடைய சமூகத்தார்பால் அனுப்பப்பட்டிருக்கிறோம்" என்று கூறினார்கள்.

[11:71]

அப்போது, அவருடைய மனைவியும் (அங்கு) நின்று கொண்டிருந்தார்; இன்னும் அவர் சிரித்தார். அவருக்கு நாம் இஸ்ஹாக்கைப் பற்றியும், இஸ்ஹாஃக்குக்குப் பின் யஃகூபை பற்றியும் நன்மாராயங் கூறினோம்.