[12:5]

என் அருமை மகனே! உமது கனவை உன் சகோதரர்களிடம் சொல்லிக் காட்ட வேண்டாம்; (அவ்வாறு செய்தால்) அவர்கள், உனக்கு(த் தீங்கிழைக்க) சதி செய்வார்கள்; ஏனெனில் (அவ்வாறு சதி செய்யத் தூண்டும்) ஷைத்தான், நிச்சயமாக மனிதனுக்குப் பகிரங்க விரோதியாக இருக்கின்றான்.

[12:6]

இவ்வாறு உன் இறைவன் உன்னைத் தேர்ந்தெடுத்து கனவுகளின் விளக்கத்தை உனக்குக் கற்றுக்கொடுத்து அவனுடைய அருளை உன்மீதும், யஃகூபின் சந்ததியார் மீதும் நிரப்பமாக்கி வைப்பான் - இதற்கு முன்னர் உன்னுடைய மூதாதையராகிய இப்றாஹீம், இஸ்ஹாக் (ஆகிய) இருவர் மீதும் தன் அருளை அவன் நிரப்பமாக்கி வைத்தது போல், நிச்சயமாக உம் இறைவன் யாவற்றையும் நன்கறிந்தோனும், மிக்க ஞானமுடையவனுமாக இருக்கின்றான்.

[12:7]

நிச்சயமாக யுஸுஃபிடத்திலும் அவர்களுடைய சகோதரர்களிடத்திலும் (அவர்களைப் பற்றி) விசாரிப்பவர்களுக்கு பல படிப்பினைகள் இருக்கின்றன.

[12:8]

(யூஸுஃபுடைய சகோதரர்கள்) கூறினார்கள்; "யூஸுஃபும், அவருடைய சகோதரரும் நம் தந்தைக்கு நம்மைவிட அதிகப் பிரியமுள்ளவர்களாக இருக்கின்றனர் - நாமோ (பலமுள்ள) கூட்டதினராக இருக்கின்றோம்; நிச்சயமாக நம் தந்தை பகிரங்கமான தவறிலேயே இருக்கின்றார் (என்றும்),

[12:9]

யூஸுஃபை' கொன்றுவிடுங்கள், அல்லது அவரை (தொலைவான) ஒரு நாட்டில் எறிந்துவிடுங்கள் (அப்பொழுது) உங்கள் தந்தையின் கவனம் உங்கள் பக்கமே இருக்கும்; இதன்பின் நீங்கள் நல்ல மனிதர்களாகி விடுவீர்கள்" என்றும் கூறியபொழுது,

[12:10]

அவர்களில் ஒருவர்; "நீங்கள் யூஸுஃபை கொலை செய்யாதீர்கள், நீங்கள் அவரை (ஏதாவது) செய்தே ஆகவேண்டுமென்றால் - அவரை ஓர் ஆழமான கிணற்றில் தள்ளிவிடுங்கள்; (அப்போது அவ்வழி செல்லும்) பிரயாணிகளில் சிலர் அவரை எடுத்துக் கொள்ளக்கூடும்" என்று கூறினார்.

[12:11]

(பிறகு தம் தந்தையிடம் வந்து,) "எங்கள் தந்தையே! யூஸுஃபுடைய விஷயத்தில் நீங்கள் ஏன் எங்களை நம்புவதில்லை? மெய்யாகவே, நாங்கள் அவருக்கு நன்மையை நாடுபவர்களாகவே இருக்கின்றோம்.

[12:12]

நாளைக்கு அவரை எங்களுடன் அனுப்பி வையுங்கள். (காட்டிலுள்ள கனிகளைப்) புசித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருப்பார்; நிச்சயமாக நாங்கள் அவரைப் பாதுகாத்துக் கொள்வோம் என்று கூறினார்கள்.

[12:13]

(அதற்கு யஃகூப்,) "நீங்கள் அவரை அழைத்துச் செல்வது, நிச்சயமாக என்னைக் கவலைக்குள் ஆக்குகிறது மேலும், நீங்கள் அவரை கவனியாது, பராமுகமாகயிருக்கும்போது அவரை ஓநாய் (பிடித்துத்) தின்றுவிடுமோ என்று நான் பயப்படுகிறேன்" என்று கூறினார்.

[12:14]

(அதற்கு) அவர்கள், "நாங்கள் (பலசாலிகளான) ஒரு கூட்டமாக இருந்தும், அவரை ஓநாய் தின்று விடுமானால், நிச்சயமாக நாங்கள் நஷ்டவாளிகளாக ஆகியிருப்போம்" என்று கூறினார்கள்.