[12:53]

அன்றியும், நான் என் மனதைப் பாவத்தைவிட்டும் பரிசத்தமாக்கி விட்டதாகவும் (கூற) இல்லை, ஏனெனில் மன இச்சையானது தீமையைத் தூண்டக்கூடியதாக இருக்கிறது - என் இறைவன் அருள்புரிந்தாலன்றி; நிச்சயமாக என் இறைவன் மிக்க மன்னிப்பவனாகவும், அருளானனாகவும் இருக்கின்றான் (என்றுங் கூறினார்).

[12:54]

இன்னும், அரசர் கூறினார்; "அவரை என்னிடம் அழைத்து வாருங்கள்; அவரை நான் என் நெருங்கிய - (ஆலொசக)ராக அமர்த்திக் கொள்வேன்;" (இவ்வாறு அரசரிடம் யூஸுஃபு வந்ததும்) அவரிடம் வேசி (அவர் ஞானத்தை நன்கறிந்த பொழுது) "நிச்சயமாக நீர் இன்றிலிருந்து நம்மிடம் பெரும் அந்தஸ்துள்ளவராகவும் நம்பிக்கைக்குரியவராகவும் (உயர்ந்து) இருக்கிறீர்" என்று கூறினார்.

[12:55]

(யூஸுஃப்) கூறினார்; "(இந்த) பூமியின் களஞ்சியங்களுக்கு என்னை (அதிகாரியாய்) ஆக்கிவிடுவீராக நிச்சயமாக நான் (அவற்றைப்) பாதுகாக்க நன்கறிந்தவன்."

[12:56]

யூஸுஃப் தான் விரும்பிய விதத்தில காரியங்கள் செய்து வர அந்த நாட்டில் யூஸுஃபுக்கு நாம் இவ்வாறே வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தோம்; இவ்வாறே நாம் நாடியவருக்கு நமது அருள் கிடைக்கும் படிச் செய்கின்றோம். நன்மை செய்பவர்களின் கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.

[12:57]

மேலும், பயபக்தியுடையவர்களாக முஃமின்களுக்கு மறுமையின் கூலி மிகச் சிறந்ததாக இருக்கும்.

[12:58]

(பின்னர் யூஸுஃபுடைய சகோதரர்கள் (மிஸ்ரு நாட்டுக்கு) வந்து, அவரிடம் நுழைந்த போது யூஸுஃப் அவர்களை அறிந்து கொண்டார்; ஆனால் அவர்களோ அவரை அறியாதவர்களாக இருந்தனர்,

[12:59]

(யூஸுஃப்) அவர்களுக்கு வேண்டிய பொருள் (தானியங்களைச்) சித்தம் செய்து கொடுத்த போது, (அவர்களை நோக்கி) "உங்கள் தந்தை வழிச் சகோதரனை (மறுமுறை நீங்கள் இங்கு வரும்போது) என்னிடம் அழைத்து வாருங்கள். நிச்சயமாக நான் உங்களுக்கு (தானியங்களை நிரப்பமாக) அளந்து கொடுத்ததையும், விருந்துபசாரம் செய்வதில் நான் "சிறந்தவன்" என்பதையும் நீங்கள் பார்க்கவில்லையா?

[12:60]

ஆகவே, நீங்கள் அவரை என்னிடம் அழைத்து வராவிட்டால், என்னிடமிருந்து உங்களுக்கு (தானிய) அளவையும் (இனி) இல்லை நீங்கள் என்னை நெருங்கவும் கூடாது என்று கூறினார்.

[12:61]

அவரது தந்தையிடத்தில் அவர் விஷயமாக நாம் ஓர் உபாயத்தை மேற்கொள்வோம். மேலும் நிச்சயமாக நாம் அதை செய்பவர்கள்தான் என்று கூறினார்கள்.

[12:62]

(பின்னர் யூஸுஃப்) தம் பணியாட்களை நோக்கி, "அவர்கள் கிரயமாகக் கொடுத்த பொருளை அவர்களுடைய மூட்டைகளிலே வைத்து விடுங்கள்; அவர்கள் தம் குடம்பத்தாரிடம் சென்ற பிறகு இதை அறிந்தால், (நம்மிடம் அதைச் சேர்ப்பிக்க) அவர்கள் திரும்பி வரக்கூடும்" என்று கூறினார்.

[12:63]

அவர்கள் தம் தந்தையாரிடம் திரும்பிய போது, அவரை நோக்கி; "எங்கள் தந்தையே! (நாங்கள் நம் சதோதரரை அழைத்துச் செல்லாவிட்டால்) நமக்கு(த் தானியம்) அளந்து கொடுப்பது தடுக்கப்பட்டுவிடும்; ஆகவே எங்களுடன் எங்களுடைய சகோதரனையும் அனுப்பிவையுங்கள். நாங்கள் (தானியம்) அளந்து வாங்கிக் கொண்டு வருவோம்; நிச்சயமாக நாங்கள் இவரை மிகவும் கவனமாக பாதுகாத்தும் வருவோம்" என்று சொன்னார்கள்.