[12:79]

அதற்கவர், 'எங்கள் பொருறை எவரிடம் நாங்கள் கண்டோமோ, அவரையன்றி (வேறு ஒருவரை) நாம் எடுத்துக் கொள்வதிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவானாக! (அப்படிச் செய்தால்) நிச்சமயாக நாங்கள் அநியாயக்காரர்களாகி விடுவோம்" என்று கூறினார்கள்.

[12:80]

எனவே அவரிடம் அவர்கள் நம்பிக்கை இழந்து விடவே, அவர்கள் (தமக்குள்) தனித்து ஆலொசனை செய்தார்கள். அவர்களுள் பெரியவர் சொன்னார்; நிச்சயமாக உங்களுடைய தந்தை உங்களிடமிருந்து அல்லாஹ்வின் மீது (ஆணையிட்டு) வாக்குறுதி வாங்கியிருக்கிறார் என்பதையும் முன்னர் யூஸுஃப் சம்பந்தமாக நீங்கள் பெருங்குறை செய்து விட்டீர்கள் என்பதையும் நீங்கள் அறியவில்லையா? ஆகவே, என் தந்தை எனக்கு அனுமதி அளிக்கும் வரை, அல்லது அல்லாஹ் எனக்கு (இது பற்றி) ஏதாவது தீர்ப்புச் செய்யும் வரை நான் இந்த பூமியை விட்டு ஒரு போதும் அகலவே மாட்டேன்; தீர்ப்பளிப்போரில் அவன் தான் மிகவும் மேலானவன்.

[12:81]

ஆகவே, "நீங்கள் உங்கள் தந்தையாரிடம் திரும்பிச் சென்று, 'எங்களுடைய தந்தையே! உங்கள் மகன் நிச்சயமாக திருடியிருக்கிறான்; நாங்கள் உறுதியாக அறிந்ததைத் தவிர (வேறெதையும்) கூறவில்லை மேலும், நாங்கள் மறைவானவற்றின் காவலர்களாகவும் இருக்கவில்லை என்று கூறுங்கள்.;

[12:82]

நாங்கள் தங்கியிருந்த ஊர் வாசிகளையும், நாங்கள் முன்னோக்கி(ச் சேர்ந்து) வந்த ஒட்டகக் கூட்டத்தினரையும் நீங்கள் கேட்டுக் கொள்ளுங்கள் - நிச்சயமாக நாங்கள் உண்மையே சொல்லுகின்றோம்' (என்றும் சொல்லுங்கள்" என்று கூறித் தந்தையாரிடம் அனுப்பி வைத்தார்).

[12:83]

(ஊர் திரும்பியவர்கள் தம் தந்தையிடம் அவ்வாறே சொல்லவும்) "இல்லை! உங்களுடைய மனங்கள் (இவ்வாறே ஒரு தவறான) விஷயத்தைச் செய்யும்படித் தூண்டி விட்டிருக்கின்றன ஆயினும், அழகான பொறுமையே (எனக்கு உகந்ததாகும்); அல்லாஹ் அவர்களனைவரையும் என்னிடம் கொண்டு வந்து சேர்க்கப் போதுமானவன்; நிச்சயமாக அவன் மிகவும் அறிந்தவனாகவும், மிக்க ஞானமுடையவனாகவும் இருக்கின்றான்" என்று கூறினார்.

[12:84]

பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி "யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!" என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.

[12:85]

(இதைக் கண்ணுற்ற அவருடைய மக்கள்; தந்தையே!) "அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் யூஸுஃபை நினைத்து (நினைத்து அழுது, நோயுற்று,) இளைத்து மடிந்து போகும் வரை (அவர் எண்ணத்தை விட்டும்) நீங்க மாட்டீர்கள்" என்று கூறினார்கள்.

[12:86]

அதற்கவர், "என்னுடைய சஞ்சலத்தையும் கவலையையும் அல்லாஹ்விடமே முறையிடுகின்றேன்; அல்லாஹ்விடமிருந்து, நீங்கள் அறியாதவற்றை நான் அறிவேன் (என்றும்);