[14:11]

(அதற்கு) அவர்களிடம் வந்த தூதர்கள் அவர்களை நோக்கி, "நாங்கள் உங்களைப் போன்ற மனிதர்களே அல்லாமல் வேறில்லை எனினும் அல்லாஹ் தம் அடியார்களில் தான் நாடியவர் மீது அருள் புரிகிறான்; அல்லாஹ்வின் அனுமதியின்றி நாங்கள் உங்களுக்கு எந்த ஓர் ஆதாரத்தையும் கொண்டு வருவதற்கில்லை இன்னும் உறுதியாக நம்பிக்கை கொண்டோர் எல்லாம், அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும்" என்று கூறினார்கள்.

[14:12]

அல்லாஹ்வின் மீதே நாங்கள் உறுதியான நம்பிக்கை கொள்ளாமலிருக்க எங்களுக்கென்ன (நேர்ந்தது)? நிச்சமயமாக அவன்தான், (நாங்கள் வெற்றி பெறும்) வழிகளையும் எங்களுக்கு காட்டினான்; நீங்கள் எங்களுக்குக் கொடுக்கும் துன்பத்தை நிச்சயமாக பொறுத்துக் கொள்வோம்; உறுதியாக நம்பிக்கை வைப்போர் அல்லாஹ்வின் மீதே உறுதியாக நம்பிக்கை வைக்கட்டும் (என்றும் கூறினார்கள்.)

[14:13]

நிராகரிப்பவர்கள் அவர்களுடைய தூதர்களை நோக்கி, நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் பூமியிலிருந்து வெளியேற்றி விடுவோம்; அல்லது நீங்கள் எங்கள் மார்க்கத்திற்குத் திரும்பிவிட வேண்டும்" என்று கூறினார்கள், அப்போது "நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்" என்று அவர்களின் இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்.

[14:14]

நிச்சயமாக நாம் உங்களை அவர்களுக்குப் பின் இப்பூமியில் குடியேற்றுவோம்; இது என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதை அஞ்சியும், என் எச்சரிக்கையை அஞ்சி நடப்பவருக்கும் (சன்மானம்) ஆகும் (என்றும் வஹீ மூலம் அவர்களுடைய இறைவன் அவர்களுக்கு அறிவித்தான்).

[14:15]

ஆகவே, அ(த் தூது)வர்கள் அல்லாஹ்வின் உதவியை நாடினார்கள்; பிடிவாதக்கார வம்பன் ஒவ்வொருவனும் அழிவை அடைந்தான்.

[14:16]

அவனுக்கு முன்னால் நரகம் தான் இருக்கிறது, இன்னும் அவனுக்கு (துர் நாற்றமுள்ள) சீழ் நீரே குடிக்கக் கொடுக்கப்படும்.

[14:17]

அதை அவன் (சிரமத்தோடு) சிறிது சிறிதாக விழுங்குவான்; எனினும் அது அவன் தொண்டையில் எளிதில் இறங்காது ஒவ்வொரு திசையிலிருந்தும் அவனுக்கு மரணம் வந்து கொண்டிருக்கும்; எனினும் அவன் இறந்து விடுபவனும் அல்லன்; அன்றியும் அவன் முன்னே (மிகக்) கொடிய வேதனையும் உண்டு.

[14:18]

எவர்கள் தங்களுடைய இறைவனை நிராகரிக்கிறார்களோ, அவர்களுக்கு உதாரணமாவது அவர்களுடைய செயல்கள் சாம்பல் போன்றவை புயல் காற்று கடினமாக வீசம் நாளில் அச்சாம்பலைக் காற்று அடித்துக் கொண்டு போய்விட்டது. (அவ்வாறே) தாங்கள் சம்பாதித்த பொருள்களில் எதன் மீதும் அவர்களுக்கு அதிகாரம் இராது இதுவே வெகு தூரமான வழிகேடாகும்.