[15:71]

அதற்கவர், "இதோ! என் புதல்வியர் இருக்கிறார்கள். நீங்கள் (ஏதும்) செய்தே தீர வேண்டுமெனக் கருதினால் (இவர்களை திருமணம்) செய்து கொள்ளலாம்" என்று கூறினார்.

[15:72]

(நபியே!) உம் உயிர் மீது சத்தியமாக, நிச்சயமாக அவர்கள் தம் மதிமயக்கத்தில் தட்டழிந்து கொண்டிருந்தார்கள்.

[15:73]

ஆகவே, பொழுது உதிக்கும் வேளையில், அவர்களை பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது.

[15:74]

பின்பு அவர்களுடைய ஊரை மேல் கீழாகப் புரட்டி விட்டோம்; இன்னும், அவர்கள் மேல் சுடப்பட்ட களிமண்ணாலான கற்களைப் பொழியச் செய்தோம்.

[15:75]

நிச்சயமாக இதில் சிந்தனையுடையோருக்குப் பல அத்தாட்சிகள் இருக்கின்றன.

[15:76]

நிச்சயமாக அவ்வூர் (நீங்கள் பயணத்தில்) வரப்போகும் வழியில்தான் இருக்கிறது.

[15:77]

திடமாக முஃமின்களுக்கு இதில் (தகுந்த) அத்தாட்சி இருக்கிறது.

[15:78]

இன்னும், அடர்ந்த சோலைகளில் வசித்திருந்த (ஷுஐபுடைய) சமூகத்தாரும் அக்கிரமக்காரர்களாக இருந்தனர்.

[15:79]

எனவே அவர்களிடம் நாம் பழிவாங்கினோம்; (அழிந்த) இவ்விரு (மக்களின்) ஊர்களும் பகிரங்கமான (போக்குவரத்து) வழியில் தான் இருக்கின்றன.

[15:80]

(இவ்வாறே ஸமூது சமூகத்தாரான) மலைப்பாறை வாசிகளும் (நம்) தூதர்களைப் பொய்யாக்கிக் கொண்டிருந்தனர்.

[15:81]

அவர்களுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்தோம்; அவர்கள் அவற்றைப் புறக்கணித்தவர்களாகவே இருந்தார்கள்.

[15:82]

அச்சமற்றுப் பாதுகாப்பாக வாழலாம் எனக்கருதி, அவர்கள் மலைகளைக் குடைந்து வீடுகளை அமைத்துக் கொண்டார்கள்.

[15:83]

ஆனால், அவர்களையும் அதிகாலையில் பேரிடி முழக்கம் பிடித்துக் கொண்டது,

[15:84]

அப்போது அவர்கள் (தம் பாதுகாப்புக்கென) அமைத்துக் கொண்டிருந்தவை எதுவும் அவர்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை.

[15:85]

நாம் வானங்களையும், பூமியையும், இவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றையும் உண்மையைக் கொண்டே அல்லாது படைக்கவில்லை. (நபியே! இவர்களுடைய தண்டனைக்குரிய) காலம் நிச்சயமாக வருவதாகவே உள்ளது ஆதலால் (இவர்களின் தவறுகளை) முற்றாகப் புறக்கணித்துவிடும்.

[15:86]

நிச்சயமாக உம்முடைய இறைவன் (எல்லாவற்றையும்) படைத்தவனாகவும், அனைத்தையும் அறிந்தவனாகவும் இருக்கின்றான்.

[15:87]

(நபியே!) நிச்சயமாக நாம் உமக்கு திரும்பத் திரும்ப ஓதக் கூடிய (ஸுரத்துல் ஃபாத்திஹாவின்) ஏழு வசனங்களையும், மகத்தான (இந்த) குர்ஆனையும் வழங்கியிருக்கின்றோம்.

[15:88]

அவர்களிலிருந்து, சில வகுப்பினரை இவ்வுலகில் எவற்றைக் கொண்டு சுகம் அனுபவிக்க நாம் செய்திருக்கின்றோமோ அவற்றின் பால் நீர் உமது கண்களை நீட்டாதீர்; அவர்களுக்காக நீர் துக்கப்படவும் வேண்டாம்; ஆனால் உம் (அன்பென்னும்) இறக்கையை முஃமின்கள் மீது இறக்கும்.

[15:89]

பகிரங்கமாக அச்சமூட்டி எச்சரிப்பவனாக நிச்சயமாக நான் இருக்கின்றேன் என்று நீர் கூறுவீராக

[15:90]

(நபியே! முன் வேதங்களை) பலவாறாகப் பிரித்தவர்கள் மீது முன்னர் நாம் (வேதனையை) இறக்கியவாறே,