[16:88]

எவர்கள் நிராகரித்துக் கொண்டும், அல்லாஹ்வின் பாதையை விட்டும் தடுத்துக்கொண்டும், இருந்தார்களோ அவர்களுக்கு - (பூமியில்) குழப்பம் உண்டாக்கிக் கொண்டிருந்ததற்காக - நாம் வேதனைக்கு மேல் வேதனையை அதிகப்படுத்திக்கொண்டே இருப்போம்.

[16:89]

இன்னும், ஒவ்வொரு சமூகத்திலும் அ(ந்த சமூகத்த)வர்களிலிருந்தே அவர்களுக்கு எதிர்சாட்சியை அவர்களுக்கு எதிராக, எழுப்பி அந்நாளில், உம்மை இவர்களுக்கு (உம்மை நிராகரிக்க முற்படும் இம்மக்களுக்கு) எதிராகச் சாட்சியாக நாம் கொண்டு வருவோம்; மேலும், இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளையும் தெளிவாக்குகிறதாகவும், நேர்வழி காட்டியதாகவும், ரஹ்மத்தாகவும், முஸ்லிம்களுக்கு நன்மாராயமாகவும் உம்மீது நாம் இறக்கி வைத்திருக்கிறோம்.

[16:90]

நிச்சயமாக அல்லாஹ் நீதி செலுத்துமாறும், நன்மை செய்யுமாறும், உறவினர்களுக்கு கொடுப்பதையும் கொண்டு (உங்களை) ஏவுகிறான்; அன்றியும், மானக்கேடான காரியங்கள், பாவங்கள், அக்கிரமங்கள் செய்தல் ஆகியவற்றை விட்டும் (உங்களை) விலக்குகின்றான் - நீங்கள நினைவு கூர்ந்து சிந்திப்பதற்காக, அவன் உங்களுக்கு நல்லுபதேசம் செய்கிறான்.

[16:91]

இன்னும், நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள்; அல்லாஹ்வை சாட்சியாக வைத்துச் சத்தியம் செய்து, அதனை உறுதிப் படுத்திய பின்னர், அச்சத்தியத்தை முறிக்காதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான்.

[16:92]

நீங்கள் (சத்தியத்தை முறிக்கும் இவ்விஷயத்தில் மதிகெட்ட) ஒரு பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள் - அவள் நூலை நூற்று நன்கு முறுக்கேற்றிய பிறகு, தானே அதைத் (தறித்து) துண்டு துண்டாக்கி விட்டாள்; ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்னும் காரணத்தால் நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதனங்களாக்கிக் கொள்ளாதீர்கள்; நிச்சயமாக அல்லாஹ் உங்களைச் சோதிப்பதெல்லாம் இதன் மூலமாகத்தான். இன்னும் நீங்கள் எ(வ் விஷயத்)தில் பேதப்பட்டுக் கொண்டிருந்தீர்களோ, (அதனை) அவன் உங்களுக்கு கியாமநாளில் நிச்சயமாகத் தெளிவாக்குவான்.

[16:93]

மேலும், அல்லாஹ் நாடியிருந்தால் உங்களை ஒரே சமுதாயத்தவராய் ஆக்கியிருப்பான்; என்றாலும் தான் நாடியவர்களை வழி கேட்டிலே விட்டு வைக்கிறான் - இன்னும் தான் நாடியவர்களை நேர் வழியில் சேர்ப்பான்; நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி நிச்சயமாக (மறுமையில்) நீங்கள் கேட்கப்படுவீர்கள்.