[16:94]

நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் (சதி, துரோகம்) ஆகியவற்றுக்குக் காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்; (அவ்வாறு செய்வதால்) நிலை பெற்ற (உங்களுடைய) பாதம் சறுகி விடும்; அன்றியும், நீங்கள் அல்லாஹ்வின் பாதையை விட்டும் (மக்களைத்) தடுத்துக்கொண்டிருந்த காரணத்தால், (இம்மையில் பெருந்) துன்பத்தை அனுபவிக்க நேரிடும்; (மறுமையிலும்) உங்களுக்குக் கடுமையான வேதனையும் உண்டு.

[16:95]

இன்னும், அல்லாஹ்விடம் செய்து கொண்ட வாக்குறுதியை அற்ப விலைக்கு நீங்கள் விற்று விடாதீர்கள்; நீங்கள் அறிந்தவர்களாக இருப்பின், அல்லாஹ்விடம் இருப்பதுதான் உங்களுக்கு மிகவும் மேலானதாக இருக்கும்.

[16:96]

உங்களிடம் இருப்பவை எல்லாம் தீர்ந்துவிடும். அல்லாஹ்விடம் இருப்பதே (அழியாது என்றென்றும்) நிலைத்திருக்கும் எவர்கள் பொறுமையுடன் (கஷ்டங்களைச்) சகித்துக் கொள்கிறார்களோ, அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.

[16:97]

ஆணாயினும், பெண்ணாயினும் முஃமினாக இருந்து யார் (சன்மார்க்கத்திற்கு இணக்கமான) நற் செயல்களைச் செய்தாலும், நிச்சயமாக நாம் அவர்களை (இவ்வுலகில்) மணமிக்க தூய வாழ்க்கையில் வாழச் செய்வோம்; இன்னும் (மறுமையில்) அவர்களுக்கு அவர்கள் செய்து கொண்டிருந்தவற்றிலிருந்து மிகவும் அழகான கூலியை நிச்சயமாக நாம் கொடுப்போம்.

[16:98]

மேலும் (நபியே!) நீர் குர்ஆனை ஓதுவீராயின் (முன்னதாக) வெருட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் காவல் தேடிக்கொள்வீராக.

[16:99]

எவர்கள் ஈமான் கொண்டு தன் இறைவனை முற்றிலும் சார்ந்திருக்கிறார்களோ அவர்கள் மீது நிச்சயமாக (ஷைத்தானுக்கு) எவ்வித அதிகாரமுமில்லை.

[16:100]

திடனாக அவனுடைய அதிகாரமெல்லாம், அவனைக் காரியகர்த்தனாக்கிக் கொள்கிறவர்கள் மீதும், அவனுக்கு இணைவைத்தார்களே அவர்கள் மீதும்தான் (செல்லும்).

[16:101]

(நபியே!) நாம் ஒரு வசனத்தை மற்றொரு வசனத்தின் இடத்தில் மாற்றினால், (உம்மிடம்) "நிச்சயமாக நீர் இட்டுக்கட்டுபவராக இருக்கின்றீர்" என்று அவர்கள் கூறுகிறார்கள்; எ(ந்த நேரத்தில், எ)தை இறக்க வேண்டுமென்பதை அல்லாஹ்வே நன்கறிந்தவன், எனினும் அவர்களில் பெரும்பாலோர் (இவ்வுண்மையை) அறிய மாட்டார்கள்.

[16:102]

(நபியே!) "ஈமான் கொண்டோரை உறுதிப்படுத்துவதற்காகவும், (இறைவனுக்கு முற்றிலும் வழிப்பட்டோராகிய) முஸ்லிம்களுக்கு நேர்வழி காட்டியாகவும் நன்மாராயமாகவும் உம்முடைய இறைவனிடமிருந்து உண்மையைக் கொண்டு ரூஹுல் குதுஸ் (என்னும் ஜிப்ரயீல்) இதை இறக்கி வைத்தார்" என்று (அவர்களிடம்) நீர் கூறுவீராக.