[16:119]

பிறகு, நிச்சயமாக உம் இறைவன் எவர்கள் அறியாமையினால் தீமை செய்து பின்பு (அவற்றிலிருந்து விலகி) தவ்பா செய்து தங்களைச் சீர்திருத்திக் கொள்கிறார்களோ அவர்களுக்கு (மன்னிப்பளிப்பவன்) நிச்சயமாக அதன் பின்பும் உம் இறைவன் பிழை பொறுப்பவனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்.

[16:120]

நிச்சயமாக இப்றாஹீம் ஒரு வழிகாட்டியாகவும் அல்லாஹ்வுக்கு அடிபணிந்தவராகவும் (நேரான பாதையில்) சார்ந்தவராகவும் இருந்தார் மேலும், அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருக்கவில்லை.

[16:121]

(அன்றியும்) அல்லாஹ்வின் அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்துபவராக அவர் இருந்தார்; அல்லாஹ் அவரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டான்; இன்னும் அவரை நேர் வழியில் செலுத்தினான்.

[16:122]

மேலும் நாம் அவருக்கு இவ்வுலகத்தில் அழகானவற்றையே கொடுத்தோம்; நிச்சயமாக மறுமையிலும் அவர் ஸாலிஹானவர்களில் (நல்லவர்களில் ஒருவராக) இருப்பார்.

[16:123]

(நபியே!) பின்னர் "நேர்மையாளரான இப்றாஹீமின் சன்மார்க்கத்தை நீர் பின்பற்ற வேண்டும்" என்று நாம் உமக்கு வஹீ அறிவித்தோம்; அவர் முஷ்ரிக்குகளில் (இணை வைப்போரில்) ஒருவராக இருந்ததில்லை.

[16:124]

சனிக்கிழமை (ஓய்வு நாள்) என்று ஏற்படுத்திய தெல்லாம், அதைப்பற்றி எவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தார்களோ, அவர்களுக்குத்தான் - நிச்சயமாக உம் இறைவன் கியாம நாளில் அவர்கள் மாறுபட்டு(த் தர்க்கித்து)க் கொண்டிருந்தவை பற்றி அவர்களுக்கிடையே தீர்ப்புச் செய்வான்.

[16:125]

(நபியே!) உம் இறைவனின் பாதையில் (மக்களை) விவேகத்துடனும், அழகிய உபதேசத்தைக் கொண்டும் நீர் அழைப்பீராக! இன்னும், அவர்களிடத்தில் மிக அழகான முறையில் தர்க்கிப்பீராக! மெய்யாக உம் இறைவன், அவன் வழியைவிட்டுத் தவறியவர்களையும் (அவன் வழியைச் சார்ந்து) நேர்வழி பெற்றவர்களையும் நன்கு அறிவான்.

[16:126]

(முஃமின்களே!) நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் எந்த அளவிற்கு நீங்கள் தண்டிக்கப்பட்டீர்களோ அது போன்ற அளவுக்கே நீங்களும் தண்டியுங்கள், பொறுத்துக் கொண்டால், நிச்சயமாக அதுவே பொறுமையாளருக்கு மிக்க மேன்மையானதாகும்.

[16:127]

(நபியே!) இன்னும் நீர் பொறுமையுடன் இருப்பீராக எனினும் அல்லாஹ்வின் உதவியில்லாமல் நீர் பொறுமையுடனே இருக்க முடியாது அவர்களுக்காக நீர் (எது பற்றியும்) கவலைப்பட வேண்டாம் - அவர்கள் செய்யும் சூழ்ச்சிகளை பற்றி நீர் (மன) நெருக்கடியில் ஆகிவிடவேண்டாம்.

[16:128]

நிச்சயமாக எவர் பயபக்தியுடையவராக இருக்கிறார்களோ, அவர்களுடனும் எவர் நற்செயல் புரிகின்றார்களோ அவர்களுடனும் அல்லாஹ் இருக்கிறான்.