[17:8]

(இதன் பின்னரும் நீங்கள் திருந்திக் கொண்டால்) உங்கள் இறைவன் உங்கள் மீது கருணை புரியப்போதும். ஆனால், நீங்கள் (பாவத்தின் பக்கமே) திரும்புவீர்களானால், நாமும் (முன் போல் தண்டிக்கத்) திரும்புவோம்; மேலும் காஃபிர்களுக்கு ஜஹன்ன(ம் எனும் நரக)த்தைச் சிறைச்சாலையாக ஆக்கி வைத்துள்ளோம்.

[17:9]

நிச்சயமாக இந்த குர்ஆன் முற்றிலும் நேராக இருக்கும் நல் வழியைக் காட்டுகிறது அன்றியும் நற்கருமங்கள் செய்து வரும் முஃமின்களுக்கு, நிச்சயமாக மிகப் பெரும் நற்கூலியுண்டு என்றும் நன்மாராயங் கூறுகிறது.

[17:10]

மேலும், எவர்கள் மறுமை நாள் மீது நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நாம், நோவினை தரும் வேதனையைச் சித்தப்படுத்தி இருக்கின்றோம்.

[17:11]

மனிதன். நன்மையாக பிரார்த்தனை செய்வது போலவே (சில சமயம்) தீமைக்காகவும் பிரார்த்திக்கின்றான்; (ஏனென்றால்) மனிதன் அவசரக்காரனாக இருக்கின்றான்.

[17:12]

இரவையும், பகலையும் நாம் இரண்டு அத்தாட்சிகளாக ஆக்கினோம். பின்னர் இரவின் அத்தாட்சி மங்கி (இருளாகி)டச் செய்தோம்; உங்கள் இறைவனுடைய அருட்கொடையை நீங்கள் தேடிக்கொள்வதற்காகவும் - ஆண்டுகளின் எண்ணிக்கைகளையும் கணக்குகளையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும், பகலின் அத்தாட்சியைப் பிரகாசமாக்கினோம் - மேலும் நாம் ஒவ்வொரு பொருளையும் தெளிவாக விவரித்திருக்கிறோம்.

[17:13]

ஒவ்வொரு மனிதனுடைய செயல் குறிப்பையும் அவனுடைய கழுத்தில் நாம் மாட்டி இருக்கிறோம்; கியாமத் நாளில் அவனுக்காக ஓர் ஏட்டை வெளிப்படுத்துவோம் - திறக்கப்பட்ட நிலையில் அதனை அவன் பெற்றுக் கொள்வான்.

[17:14]

நீ உன் புத்தகத்தைப் படித்துப் பார்! இன்று உனக்கு எதிராக உன்னுடைய ஆத்மாவே கணக்கதிகாரியாக இருக்கப் போதும் (என்று அப்போது நாம் கூறுவோம்).

[17:15]

எவன் நேர்வழியில் செல்கின்றானோ, அவன் தன்னுடைய நன்மைக்காகவே நேர் வழியில் செல்கிறான்; எவன் வழி கேட்டில் செல்கின்றானோ, அவன் தனக்கே கேடு செய்து கொண்டான்; (நிச்சயமாக) ஒருவனுடைய பாவச்சுமையை மற்றொருவன் சுமக்கமாட்டான்; (நம்) தூதரை அனுப்பாத வரையில் (எவரையும்) நாம் வேதனை செய்வதில்லை.

[17:16]

நாம் ஓர் ஊரை (அதன் தீமையின் காரணமாக) அழிக்க நாடினால், அதிலுள்ள (வசதியான) சுகவாசிகளை (நேர்வழியைப் பின்பற்றி வாழுமாறு) நாம் ஏவுவோம்; ஆனால் அவர்களோ (நம் ஏவலுக்கு கட்டுப்படாமல்) வரம்பு மீறி நடப்பார்கள். அப்போது, அவ்வூரின் மீது, (வேதனை பற்றிய நம்) வாக்கு உண்மையாகி விடுகிறது - அப்பால், நாம் அதனை அடியோடு அழித்து விடுகிறோம்.

[17:17]

நூஹுக்குப்பின் எத்தனை தலைமுறையினரை நாம் அழித்திருக்கின்றோம்? இன்னும், தன் அடியார்களின் பாவங்களை நன்கறிந்தவனாகவும், கூர்ந்து நோக்குபவனாகவும் இருப்பதற்கு உம் இறைவன் போதுமானவன்.