[17:59]

(நம்முடைய அத்தாட்சிகளை எவர்களுக்கு) முந்தியவர்களும் பொய்ப்பித்ததைத் தவிர (வேறு எதுவும் இவர்கள் கோரும்) அத்தாட்சிகளை அனுப்ப நம்மைத் தடுக்கவில்லை (இதற்கு முன்) நாம் 'ஸமூது' கூட்டத்தாருக்கு ஒரு பெண் ஒட்டகத்தைக் கண்கூடான அத்தாட்சியாகக் கொடுத்திருந்தோம்; அவர்களோ (வரம்பு மீறி) அதற்கு அநியாயம் செய்தனர்; (மக்களை) அச்சமூட்டி எச்சரிப்பதற்காவே அன்றி நாம் (இத்தகைய) அத்தாட்சிகளை அனுப்புவதில்லை.

[17:60]

(நபியே!) நிச்சயமாக உம்முடைய இவைன் மனிதர்களைச் சூழ்ந்து கொண்டிருக்கின்றான் என்று உமக்குக் கூறியதை (நினைவு கூர்வீராக! மிஃராஜின் போது) நாம் உமக்குக்காட்டிய காட்சியையும் குர்ஆனில் சபிக்கப்பட்டும் (ஜக்கூம்) மரத்தையும் மனிதர்களுக்கு சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை. இன்னும் நாம் அவர்களை அச்சுறுத்துகின்றோம்; ஆனால், இது அவர்களுடைய பெரும் அழிச்சாட்டியத்தையே அதிகரிக்கச் செய்கின்றது.

[17:61]

இன்னும், (நினைவு கூர்வீராக!) நாம் மலக்குகளிடம் "ஆதமுக்கு நீங்கள் ஸுஜூது செய்யுங்கள்" என்று கூறிய போது, இப்லீஸை தவிர அவர்கள் ஸுஜூது செய்தார்கள்; அவனோ "களி மண்ணால் நீ படைத்தவருக்கா நான் ஸுஜூது செய்ய வேண்டும்?" என்று கூறினான்.

[17:62]

எனக்கு மேலாக கண்ணியப் படுத்திய இவரைப் பார்த்தாயா? நீ எனக்கு கியாம நாள்வரை அவகாசம் சொடுத்தால், நாம் இவருடைய சந்ததிகளில் சிலரைத் தவிர (மற்றவர்களை) நிச்சயமாக வழிகெடுத்து விடுவேன் என்று (இப்லீஸை) கூறினான்.

[17:63]

நீ போய் விடு அவர்களில் உன்னைப் பின்பற்றுபவர் இருந்தால் - நிச்சயமாக நரகம் தான் உங்கள் கூலியில் நிரப்பமான கூலியாக இருக்கும்.

[17:64]

இன்னும் அவர்களிலிருந்து நீ எவரை (வழி சறுகச் செய்ய) சக்தி பெற்றிருக்கிறாயோ அவர்களை உன் கூப்பாட்டைக் கொண்டு வழி சறுகச் செய்; உன்னுடைய குதிரைப் படையையும் காலாட்படையையும் கொண்டு அவர்களுக்கு எதிராக முழக்கமிடச் செய், அவர்களுடைய செல்வங்களிலும், குழந்தைகளிலும் நீ கூட்டாக இருந்து கொள்; அவர்களுக்கு(ப் பொய்யான) வாக்குறுதிகளையும் கொடு!" (என்றும் அல்லாஹ் கூறினான்) ஆகவே, ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிப்பதெல்லாம் வெறும் ஏமாற்றேயன்றி வேறில்லை.

[17:65]

நிச்சயமாக (முஃமினான) என்னுடைய அடியார்கள் மீது உனக்கு எந்த அதிகாரமுமில்லை (என்றும் அல்லாஹ் கூறினான்; நபியே! அந்த என் நல்லடியார்களைக்) காத்துக் கொள்ள உம்முடைய இறைவன் போதுமானவன்.

[17:66]

(மானிடர்களே!) உங்கள் இறைவன் எப்படிப்பட்டவன் என்றால் அவனுடைய அருட் கொடைகளை நீங்கள் தேடி(ச் சம்பாதித்து)க் கொள்ளும் பொருட்டுக் கப்பலை அவனே கடலில் செலுத்துகிறான்; நிச்சயமாக அவன் உங்கள் மீது மிக்க கிருபையுடையவனாக இருக்கின்றான்.