[17:67]

இன்னும், கடலில் உங்களை ஏதேனும் தங்கடம் (துன்பம்) தீண்டினால், அவனையன்றி நீங்கள் (தெய்வங்கள் என) எவற்றை அழைத்துக் கொண்டிருந்தீர்களோ, அவையாவும் மறைந்து விடும்; எனினும் (அல்லாஹ்) உங்களை ஈடேற்றிக் கரையளவில் கொண்டு வந்து சேர்க்கும் பொழுது நீங்கள் (அவனைப்) புறக்கணித்து விடுகிறீர்கள் - இன்னும், மனிதன் மகா நன்றி மறப்பவனாகவே இருக்கின்றான்.

[17:68]

(கரை சேர்ந்த) பின் அவன் உங்களை பூமியின் ஒரு புறத்தில் புதையும்படி செய்து விட மாட்டான் என்றோ, அல்லது உங்கள் மீது கல்மாரியை அனுப்பமாட்டான் என்றோ அச்சந் தீர்ந்து இருக்கிறீர்களா? பின்னர் நீங்கள் உங்களைப் பாதுகாப்போர் எவரையும் காண மாட்டீர்கள்.

[17:69]

அல்லது, அவன் மீண்டும் ஒரு தடவை அக்கடலில் உங்களை மீளச் செய்து, (எல்லாவற்றையும்) முறித்துத் தள்ளும் புயல் காற்றை உங்கள் மீதனுப்பி, நீங்கள் நிராகரித்ததற்காக உங்களை மூழ்கடித்து விடமாட்டான் என்றும் நீங்கள் அச்சந்தீர்ந்து இருக்கிறீர்களா? (அப்படி நேர்ந்தால் ஏன் இவ்விஷயத்தை அவ்வாறு செய்தோம் என) நம்மைத் தொடர்ந்து உங்களுக்கு(க் கேட்போர்) எவரையும் காணமாட்டீர்கள்.

[17:70]

நிச்சயமாக, நாம் ஆதமுடைய சந்ததியைக் கண்ணியப்படுத்தினோம்; இன்னும், கடலிலும், கறையிலும் அவர்களைச் சுமந்து, அவர்களுக்காக நல்ல உணவு(ம் மற்றும்) பொருட்களையும் அளித்து, நாம் படைத்துள்ள (படைப்புகள்) பலவற்றையும் விட அவர்களை (தகுதியால்) மேன்மைப் படுத்தினோம்.

[17:71]

(நபியே!) நாம் எல்லா மக்களையும் அவரவர்களுடைய தலைவர்களுடன் அழைக்கும் நாளை (நீர் நினைவூட்டுவீராக அந்நாளில்) எவருடைய (செயல் குறிப்பு) ஏடு அவருடைய வலக்கையில் கொடுக்கப்படுகிறதோ, அ(த்தகை நற்பேறுடைய)வர்கள் தம் ஏடுகளை (நிம்மதியுடன்) படிப்பார்கள்; இன்னும், அவர்கன் அணுவளவும் அநியாயம் செய்யப்பட மாட்டார்கள்.

[17:72]

யார் இம்மையில் (நேர்வழியடையாக்) குருடனாக இருக்கிறானோ அவன் மறுமையிலும் (நற்பேற்றைக் காணாக்) குருடன்தான்; இன்னும், அவன் நேர்வழியில் மிகவும் தவறியவனாவான்.

[17:73]

(நபியே!) இன்னும் நாம் உமக்கு வஹீ மூலம் அறிவித்தோமே அதை விட்டும், அதல்லாததை நம்மீது நீர் இட்டுக்கட்டிக் கூறும்படி உம்மைத் திருப்பிவிடவே அவர்கள் முனைந்தார்கள்; (அவ்வாறு நீர் செய்திருந்தால்) உம்மை தம் உற்ற நண்பராகவும் அப்போது எடுத்துக் கொண்டிருப்பார்கள்.

[17:74]

மேலும், நாம் உம்மை (ஹக்கான பாதையில்) உறுதிப்படுத்தி வைத்திருக்க வில்லையெனின் நீர் கொஞ்சம் அவர்கள் பக்கம் சாய்ந்து போயிருத்தல் கூடும்.

[17:75]

(அவ்வாறு நீர் சாய்ந்திருந்தால்) நீர் இவ்வாழ்நாளில் இரு மடங்கு (வேதனையும்,) மரணத்தில் இரு மடங்கு (வேதனையு)ம் நுகருமாறு நாம் செய்திருப்போம்; பின்பு, நமக்கு எதிராக உமக்கு உதவியாளர் எவரையும் நீர் காணமாட்டீர்.