[17:97]

அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ, அவர் தாம் நேர்வழிப்பெற்றவர் ஆவார்; இன்னும் அவன் யாரை வழிகேட்டில் விடுகிறானோ அ(த்தகைய)வருக்கு உதவி செய்வோர் அவனையன்றி வேறு எவரையும் நீர் காணமாட்டீர்; மேலும் அவர்களைக் குருடர்களாகவும், ஊமைகளாகவும், செவிடர்களாகவும் தம் முகங்களில் குப்புற வரும்படி செய்து கியாம நாளில் ஒன்று சேர்ப்போம்; இன்னும் அவர்கள் ஒதுங்கும் இடம் நரகமேயாகும்; (நரக நெருப்பு). அணையும் போதெல்லாம் நாம் அவர்களுக்கு நெருப்பை அதிகமாக்குவோம்.

[17:98]

அவர்கள் தம் வசனங்களை நிராகரித்து, "நாம் (மரித்து) எலும்புகளாகவும், உக்கி மண்ணோடு மண்ணாகவும் ஆகிவிடுவோமாயின், (மீண்டும்) புதியதொரு படைப்பாக எழுப்பப்படுவோமா?" என்றும் சொல்லிக் கொண்டிருந்தார்களே அதற்காக அவர்களுடைய கூலி இது தான்.

[17:99]

நிச்சயமாக வானங்களையும், பூமியையும் படைத்தவனாகிய அல்லாஹ் அவர்களைப் போன்றதைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவிலலையா? இன்னும் அவர்களுக்கு ஒரு குறிப்பட்ட தவணையையும் ஏற்படுத்தியிருக்கிறான்; இதில் சந்தேகமில்லை, எனினும், அக்கிரமக்காரர்கள் (இவ்வுண்மையை) நிராகரிக்காமல் இல்லை!

[17:100]

என்னுடைய இறைவனின் (ரஹ்மத்து என்னும்) அருள் பொக்கிஷங்களை நீங்கள் சொந்தப்படுத்திக் கொண்டு இருப்பீர்களானாலும், அவை செலவாகி விடுமோ என்ற பயத்தினால், நீங்கள் (அவற்றைத்) தடுத்துக்கொள்வீர்கள் - மேலும், மனிதன் உலோபியாகவே இருக்கின்றான் என்று (நபியே!) நீர் கூறும்.

[17:101]

நிச்சயமாக நாம் மூஸாவுக்குத் தெளிவான ஒன்பது அத்தாட்சிகளை கொடுத்திருந்தோம்; அவர் அவர்களிடம் (அவற்றைக் கொண்டு) வந்தபோது (என்ன நடந்தது என்று) பனீ இஸ்ராயீல்களிடம் (நபியே!) நீர் கேளும். ஃபிர்அவ்ன் அவரை நோக்கி 'மூஸாவே! நிச்சயமாக நான் உம்மை சூனியம் செய்யப்பட்டவராகவே எண்ணுகிறேன்' என்று கூறினான்.

[17:102]

(அதற்கு) மூஸா "வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனைத் தவிர (வேறு யாரும்) இவற்றைத் தெளிவான சான்றுகளாக அனுப்பவில்லை என்பதை நிச்சயமாக நீ அறிவாய்; ஃபிர்அவ்னே! நிச்சயமாக நீ அழிக்கப்பட இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் எண்ணுகின்றேன்" என்று கூறினார்.

[17:103]

ஆகவே (ஃபிர்அவ்ன்) அந்நாட்டை விட்டு (மூஸாவையும் பனீ இஸ்ராயீல்களையும்) விரட்டிவிட நாடினான்; ஆனால், நாம் அவனையும் அவனுடனிருந்தவர்கள் அனைவரையும் மூழ்கடித்தோம்.

[17:104]

இதன் பின்னர் நாம் பனூ இஸ்ராயீல்களுக்குச் சொன்னோம், நீங்கள் அந்த நாட்டில் குடியிருங்கள்; மறுமையின் வாக்குறுதி வந்தால், நாம் (உங்களையும், ஃபிர்அவ்னின் கூட்டத்தையும் விசாரணைக்காக) நம்மிடம் ஒன்று சேர்ப்போம்."