[18:16]

அவர்களையும், அவர்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றையும் விட்டு விலகி நீங்கள், குகையின்பால் ஒதுங்கிக் கொள்ளுங்கள், உங்களுடைய இறைவன் தன்னுடைய ரஹ்மத்திலிருந்து உங்களுக்கு விசாலமாகக் கொடுத்து, உங்கள் காரியத்தில் உணவு பிரச்சனையை உங்களுக்கு எளிதாக்கித் தருவான் (என்று அவர்களில் ஓர் இளைஞர் சொன்னார்).

[18:17]

சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர்.

[18:18]

மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர்,

[18:19]

இன்னும் அவர்களிடையே ஒருவரையொருவர் கேட்டுக் கொள்வதற்காக நாம் அவர்களை இவ்வாறு எழுப்பினோம்; அவர்களிலிருந்து சொல்பவர் (ஒருவர்) "நீங்கள் எவ்வளவு நேரம் (நித்திரையில்) இருந்தீர்கள்?" எனக் கேட்டார்; "ஒரு நாள் அல்லது ஒரு நாளின் சிறிது பாகம் தங்கியிருந்தோம்" எனக் கூறினார்கள்; (மற்றவர்கள்) "நீங்கள் (நித்திரையில்) இருந்த காலத்தை உங்கள் இறைவன்தான் நன்கு அறிந்தவன்; ஆகவே, உங்களில் ஒருவரை இந்த வெள்ளிக் காசுடன் பட்டணத்திற்கு அனுப்புங்கள்; அவர்கள் சுத்தமான ஆகாரம் எது என்பதை நன்கு கவனித்து, அதிலிருந்து ஆகாரத்தை உங்களுக்காகக் கொண்டு வரட்டும்; மேலும் அவர் எச்சரிக்கையாக இருக்கட்டும்; உங்களைப் பற்றி எவருக்கும் அவர் அறிவித்து விட வேண்டாம் (என்றனர்).

[18:20]

ஏனென்றால், நிச்சயமாக அவர்கள் உங்களை அறிந்து கொண்டால், உங்களைக் கல்லாலடித்துக் கொன்றுவிடுவார்கள்; அல்லது தங்களுடைய மார்க்கத்தில் உங்களை மீட்டி விடுவார்கள்; அப்புறம், நீங்கள் ஒருபோதும் வெற்றியடைய மாட்டீர்கள்" (என்றும் கூறினர்).