[18:84]
நிச்சயமாக
நாம் அவருக்கு பூமியில்
(தம் ஆட்சியை நிறுவ)
வசதிகள் அளித்தோம்; இன்னும்
ஒவ்வொரு பொருளிலிருந்தும்
(தக்க பலனடையும்)
வழியையும் அவருக்குக்
(காண்பித்துக்) கொடுத்தோம்.
[18:85]
ஆகவே
(அவர்) ஒரு வழியைப்
பின் பற்றினார்.
[18:86]
சூரியன்
மறையும் (மேற்குத்) திசைவரை
அவர் சென்றடைந்த
போது, அது ஒரு சேறு
கலந்த நீரில்
(மூழ்குவதுபோல்) மறையக்
கண்டார்; இன்னும்
அவர் அவ்விடத்தில்
ஒரு சமூகத்தினரையும்
கண்டார்; "துல்கர்னைனே!
நீர் இவர்களை(த்
தண்டித்து) வேதனை
செய்யலாம்; அல்லது அவர்களுக்கு
அழகியதான நன்மை
செய்யலாம்" என்று
நாம் கூறினோம்.
[18:87]
(ஆகவே அம்மக்களிடம்
அவர்) கூறினார்; "எவன் ஒருவன்
அநியாயம் செய்கிறானோ
அவனை நாம் வேதனை செய்வோம்." பின்னர்
அ(த்தகைய)வன்
தன் இறைவனிடத்தில்
மீள்விக்கப்பட்டு, (இறைவனும்)
அவனைக் கடுமையான
வேதனையைக் கொண்டு
வேதனை செய்வான்.
[18:88]
ஆனால், எவன்
ஈமான் கொண்டு (ஸாலிஹான)
- நல்ல - செயல்களைச்
செய்கிறானோ அவனுக்கு
அழகான நற்கூலி
இருக்கிறது இன்னும்
நம்முடைய கட்டளைகளில்
இலகுவானதை அவனுக்கு
நாம் கூறுவோம்.
[18:89]
பின்னர், அவர்
(மற்றும்) ஒரு வழியைப்
பின்பற்றிச் சென்றார்.
[18:90]
அவர்
சூரியன் உதயமாகும் (கிழக்குத்)
திசையை எத்திய
போது, அது ஒரு சமூகத்தாரின்
மீது உதயமாகி
(அவர்கள் வெயிலில்)
இருப்பதைக் கண்டார்; அவர்களுக்கும்
சூரியனுக்குமிடையே
நாம் ஒரு தடுப்பையும்
ஏற்படுத்தவில்லை.
[18:91]
(வெப்பத்திலிருந்து
தம்மைக் காத்துக்
கொள்ளாத அவர்களுடைய
நிலை) அவ்வாறுதான்
இருந்தது இன்னும்
என்னென்ன அவருடன்
இருந்தது என்பதை
நாம் நன்கறிந்திருக்கிறோம்.
[18:92]
பின்னர், அவர்
(வேறொரு) வழியைப்
பின்பற்றிச் சென்றார்.
[18:93]
இரு
மலைகளுக்கிடையே
(இருந்த ஓரிடத்தை)
அவர் எத்தியபோது, அவ்விரண்டிற்கும்
அப்பால் இருந்த
ஒரு சமூகத்தாரைக் கண்டார்.
அவர்கள் எந்தச்
சொல்லையும் விளங்கிக்
கொள்பவராக இருக்கவில்லை.
[18:94]
அவர்கள் "துல்கர்னைனே! நிச்சயமாக
யஃஜூஜும், மஃஜூஜும்
பூமியில் ஃபஸாது
- குழப்பம் - செய்கிறார்கள்; ஆதலால், எங்களுக்கும், அவர்களுக்குமிடையே
ஒரு தடுப்பு(ச்
சுவரை) நீர் ஏற்படுத்தித்
தரும் பொருட்டு
நாங்கள் உமக்கு
ஒரு தொகையைத் தரலாமா?" என்று கேட்டார்கள்.
[18:95]
அதற்கவர்; "என் இறைவன் எனக்கு
எதில் (வசதிகள்)
அளித்திருக்கிறானோ
அது (நீங்கள் கொடுக்க
இருப்பதைவிட) மேலானது
ஆகவே, (உங்கள் உடல்)
பலம் கொண்டு எனக்கு
நீங்கள் உதவி செய்யுங்கள்; நான் உங்களுக்கும்
அவர்களுக்கும்
இடையே ஓர் உறுதியான
தடுப்பை ஏற்படுத்தி
விடுகிறேன்" என்று
கூறினார்
[18:96]
நீங்கள்
இரும்புப் பாளங்களை எனக்குக்
கொண்டு வாருங்கள்
(என்றார்). பிறகு
அவை இரு மலைகளின்
(இடையே நிரம்பி) உச்சிக்குச்
சமமாகும் போது, ஊதுங்கள்
என்றார்; அதனை
அவர் நெருப்பாக
ஆக்கியதும் (பின்னர் "உருக்கிய)
செம்பை என்னிடம்
கொண்டு வாருங்கள்; அதன்
மேல் ஊற்றுகிறேன்" (என்றார்).
[18:97]
எனவே, (யஃஜூஜ், மஃஜூஜ் கூட்டத்தார்)
அதன் மீது ஏறவும்
சக்தி பெறவில்லை, அதில்
துவாரமிடவும்
அவர்கள் சக்தி
பெறவில்லை.