[19:12]

(அதன் பின்னர்) "யஹ்யாவே! நீர் இவ்வேதத்தைப் பலமாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளும்" (எனக் கூறினோம்) இன்னும் அவர் குழந்தையாக இருக்கும் போதே அவருக்கு நாம் ஞானத்தை அளித்தோம்.

[19:13]

அன்றியும் நாம் நம்மிடமிருந்து இரக்க சிந்தனையும், பரிசுத்தத் தன்மையையும் (அவருக்குக் கொடுத்தோம்) இன்னும் அவர் மிகவும் பயபக்தியுடையவராக இருந்தார்.

[19:14]

மேலும், தம் பெற்றோருக்கு நன்றி செய்பவராகவும் இருந்தார்; அவர் பெருமை அடிப்பவராகவோ, (அல்லாஹ்வுக்கு) மாறு செய்பவராகவோ இருக்கவில்லை.

[19:15]

ஆகவே, அவர் பிறந்த நாளிலும், அவர் இறக்கும் நாளிலும், (மறுமையில்) அவர் உயிர் பெற்றெழும் நாளிலும் அவர் மீது ஸலாம் (சாந்தி) நிலைத்திருக்கும்.

[19:16]

(நபியே!) இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவு கூர்வீராக அவர் தம் குடும்பத்தினரை விட்டும் நீங்கி, கிழக்குப் பக்கமுள்ள இடத்தில் இருக்கும்போது,

[19:17]

அவர் (தம்மை) அவர்களிடமிருந்து (மறைத்துக் கொள்வதற்காக) ஒரு திரையை அமைத்துக் கொண்டார்; அப்போது நாம் அவரிடத்தில் நம் ரூஹை (ஜிப்ரயீலை) அனுப்பி வைத்தோம்; (மர்யமிடம்) சரியான மனித உருவில் தோன்றினார்.

[19:18]

(அப்படி அவரைக் கண்டதும்,) "நிச்சயமாக நாம் உம்மை விட்டும் ரஹ்மானிடம் காவல் தேடுகிறேன்; நீர் பயபக்தியுடையவராக இருந்தால் (நெருங்காதீர்)" என்றார்.

[19:19]

நிச்சயமாக நான் உம்முடைய இறைவனின் தூதன்; பரிசுத்தமான புதல்வரை உமக்கு அளிக்க (வந்துள்ளேன்) என்று கூறினார்.

[19:20]

அதற்கு அவர் (மர்யம்), "எந்த ஆடவனும் என்னைத் தீண்டாமலும், நான் நடத்தை பிசகியவளாக இல்லாதிருக்கும் நிலையிலும் எனக்கு எவ்வாறு புதல்வன் உண்டாக முடியும்?" என்று கூறினார்.

[19:21]

அவ்வாறேயாகும்; 'இது எனக்கு மிகவும் சுலபமானதே மனிதர்களுக்கு ஓர் அத்தாட்சியாகவும், நம்மிடமிருந்து ஒரு ரஹ்மத்தாகவும் நாம் அவரை ஆக்குவோம்; இது விதிக்கப்பட்ட விஷயமாகும்' என்று உம் இறைவன் கூறுகிறான் எனக் கூறினார்.

[19:22]

அப்பால், மர்யம் ஈஸாவை கருக்கொண்டார் பின்னர் கர்ப்பத்துடன் தொலைவிலுள்ள ஓரிடத்தை சென்றடைந்தார்.

[19:23]

பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது "இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப் பட்டவளாகி இருக்கக் கூடாதா" என்று கூறி(அரற்றி)னார்.

[19:24]

(அப்போது ஜிப்ரயீல்) அவருக்குக் கீழிருந்து "(மர்யமே!) கவலைப்படாதீர்கள்! உம்முடைய இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு சின்ன ஆற்றை உண்டாக்கியிருக்கின்றான்" என்று அழைத்து கூறினான்.

[19:25]

இன்னும், இந்த பேரீச்ச மரத்தின் கிளையைப் பிடித்து உம் அருகில் இழுத்துக் குலுக்கும்; (கொய்வதற்குப்) பக்குவமான பழங்களை உம் மீது அது உதிர்க்கும்.