[19:65]

(அவனே) வானங்களுக்கும், பூமிக்கும், அவை இரண்டிற்குமிடையே உள்ளவற்றிற்கும் இறைவனாக இருக்கின்றான். ஆகையினால் அவ(ன் ஒருவ)னையே வணங்குவீராக! மேலும், அவனை வணங்குவதில் (கஷ்டங்களையேற்றுப்) பொறுமையுடன் இருப்பீராக! (பெயரில், வல்லமையில், மற்றும் தன்மைகளில் அல்லாஹ்வுக்கு) நிகரானவனை நீர் அறிவீரா?

[19:66]

(எனினும்) மனிதன் கேட்கிறான்; "நான் இறந்து போனால், உயிருள்ளவனாக மேலும் எழுப்பப்படுவேனா? என்று.

[19:67]

யாதொரு பொருளுமாக இல்லாதிருந்த அவனை நிச்சயமாக நாம் முன்னர் படைத்தோம் என்பதை மனிதன் நினைத்துப் பார்க்க வேண்டாமா?

[19:68]

ஆகவே, (நபியே!) உம் இறைவன் மீது சத்தியமாக நாம் அவர்களையும், (அவர்களுடைய) ஷைத்தான்களையும் நிச்சயமாக (உயிர்ப்பித்து) ஒன்று சேர்ப்போம்; பின்னர் அவர்களை(யெல்லாம்) நரகத்தினைச் சூழ முழந்தாளிட்டவர்களாக ஆஜராக்குவோம்.

[19:69]

பின்னர், நாம் ஒவ்வொரு கூட்டத்திலிருந்தும் அர்ரஹ்மானுக்கு மாறு செய்வதில் கடினமாக - தீவிரமாக - இருந்தவர்கள் யாவற்றையும் நிச்சயமாக வேறு பிரிப்போம்.

[19:70]

பின்னர், அ(ந் நரகத்)தில் புகுவதற்கு அவர்களில் (தங்கள் பாவத்தால்) முதல் தகுதிவுடையவர்கள் யார் என்பதை நிச்சயமாக நாம் அறிவோம்.

[19:71]

மேலும், அதனைக் கடக்காமல் உங்களில் யாரும் (போக) முடியாது இது உம்முடைய இறைவனின் முடிவான தீர்மானமாகும்.

[19:72]

அதன் பின்னர், தக்வாவுடன் - பயபக்தியுடன் இருந்தார்களே அவர்களை நாம் ஈடேற்றுவோம்; ஆனால், அநியாயம் செய்தவர்களை அ(ந் நரகத்)தில் முழந்தாளிட்டவர்களாக விட்டு விடுவோம்.

[19:73]

இன்னும் நம்முடைய தெளிவான வசனங்கள் அவர்கள்முன் ஓதப்பெறும்போது முஃமின்களிடத்தில், (அவற்றை) நிராகரிக்க முயலும் காஃபிர்கள்; "நம் இரு வகுப்பாரில் இப்பொழுது யாருடைய வீடு மேலானதாகவும், யாருடை சபை மிக அழகானதாகவும் இருக்கிறது?" என்று கேட்கின்றனர்.

[19:74]

இன்னும், இவர்களைவிட மிக்க அழகான தளவாடங்களையும், தோற்றத்தையும் பெற்றிருந்த எத்தனையோ தலைமுறைகளை இவர்களுக்கு முன் நாம் அழித்திருக்கிறோம்.

[19:75]

யார் வழிகேட்டில் இருக்கிறார்களோ அவர்கள் வாக்களிக்கப்பட்ட (இவ்வுலக) வேதனையை அல்லது மறுமையை காணும்வரை அர்ரஹ்மான அவர்களுக்கு அவகாசம் கொடுக்கிறான்; (அவ்வாறு காணும் போது) எவருடைய வீடு கெட்டது எவருடைய கூட்டம் பலஹீனமானது என்பதை திட்டமாக அவர்கள் அறிந்து கொள்வார்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக.

[19:76]

மேலும், எவர் நேர்வழியில் செல்கிறார்களோ அவர்களை அல்லாஹ் மேலும் மேலும் நேர்வழியில் செலுத்துகிறான்; இன்னும் நிலைத்திருக்கக் கூடிய நற்கருமங்கள் உம்முடைய இறைவனிடத்திலே சிறந்த கூலியாகவும் சிறந்த தங்குமிடமாகவும் அமையும்.