[20:38]

உம் தாயாருக்கு அறிவிக்க வேண்டியதை அறிவித்த நேரத்தை (நினைவு கூர்வீராக)!

[20:39]

அவரை (குழந்தையை)ப் பேழையில் வைத்து (அப்பேழையை நீல்) நதியில் போட்டுவிடும்; பின்னர் அந்த நதி அதைக் கரையிலே கொணர்ந்து எறிந்து விடும், அங்கே எனக்கு பகைவனும், அவருக்குப் பகைவனுமாகிய (ஒரு)வன் அவரை எடுத்துக்கொள்வான் (எனப் பணித்தோம்). மேலும், "(மூஸாவே!) நீர் என் கண் முன்னே வளர்க்கப்படுவதற்காக உம் மீது அன்பைப் பொழிந்தேன்.

[20:40]

(பேழை கண்டெடுக்கப்பட்ட பின்) உம் சகோதரி நடந்து வந்து, 'இவரை வளர்க்கும் பொறுப்பை ஏற்றுக் கொள்ளக் கூடிய ஒருவரை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா?' என்று கேட்டாள், ஆகவே நாம் உம் தாயாரிடம், அவருடைய கண் குளிர்ச்சியடையும் பொருட்டும், அவர் துக்கம் அடையாமல் இருக்கும் பொருட்டும் உம்மை (அவர்பால்) மீட்டினோம், பின்னர் நீர் ஒரு மனிதனைக் கொன்று விட்டீர், அப்பொழுதும் நாம் உம்மை அக்கவலையிலிருந்து விடுவித்தோம், மேலும் உம்மைப் பல சோதனைகளைக் கொண்டு சோதித்தோம். அப்பால் நீர் பல ஆண்டுகளாக மதியன் வாசிகளிடையே தங்கியிந்தீர்; மூஸாவே! பிறகு நீர் (நம் தூதுக்குரிய) தக்க பருவத்தை அடைந்தீர்.

[20:41]

இன்னும், "எனக்காகவே நான் உம்மைத் (தூதராகத்) தெரிந்தெடுத்துள்ளேன்.

[20:42]

'ஆகவே, நீரும் உம் சகோதரரும் என்னுடைய அத்தாட்சிகளுடன் செல்வீர்களாக! மேலும் என்னைத் தியானிப்பதில் (நீங்களிருவரும்) சளைக்காதீர்கள்.

[20:43]

நீங்கள் இருவரும் ஃபிர்அவ்னிடம் செல்லுங்கள்; நிச்சயமாக அவன் வரம்பு மீறிவிட்டான்.

[20:44]

நீங்கள் இருவரும் அவனிடம் (சாந்தமாக) மென்மையான சொல்லால் சொல்லுங்கள், அதனால், அவன் நல்லுபதேசம் பெறலாம், அல்லது அச்சம் கொள்ளலாம்."

[20:45]

எங்கள் இறைவனே! அவன் எங்களுக்குத் தீங்கிழைக்கத் தீவிரப்படவோ அல்லது வரம்பு மீறவோ செய்யலாம் என்று நாங்கள் பயப்படுகிறோம் என்று (மூஸாவும், ஹாரூனும்) கூறினார்கள்.

[20:46]

(அதற்கு அல்லாஹ்) "நீங்களிருவரும் அஞ்ச வேண்டாம்; நிச்சயமாக நான் (யாவற்றையும்) செவியேற்பவனாகவும், பார்ப்பவனாகவும் உங்களிருவருடனும் இருக்கிறேன்" என்று கூறினான்.

[20:47]

ஆகவே, நீங்கள் இருவரும் அவனிடம் சென்று: 'நாங்களிருவரும் உன்னுடைய இறைவனின் தூதர்கள், பனூ இஸ்ராயீல்களை எங்களுடன் அனுப்பி விடு, மேலும் அவர்களை வேதனை படுத்தாதே, திடனாக, நாங்கள் உன் இறைவனிடமிருந்து ஓர் அத்தாட்சியை உனக்குக் கொண்டு வந்திருக்கிறோம், இன்னும் எவர் நேர் வழியைப் பின்பற்றுகிறாரோ அவர் மீது (சாந்தி) ஸலாம் உண்டாவதாக' என்று சொல்லுங்கள் (என்று அல்லாஹ் கட்டளையிட்டான்).

[20:48]

எவன் (நாங்கள் கொண்டு வந்திருப்பதை) பொய்ப்பித்து, புறக்கணிக்கிறானோ அவன் மீது நிச்சயமாக வேதனை ஏற்படும் என எங்களுக்கு உறுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது (என்று நீங்கள் இருவரும் அவனுக்குக் கூறுங்கள்).

[20:49]

(இதற்கு ஃபிர்அவ்ன்) "மூஸாவே! உங்களிருவருடைய இறைவன் யார்?" என்று கேட்டான்.

[20:50]

ஒவ்வொரு பொருளுக்கும் அதற்கான அமைப்பை வழங்கி பின்னர் வழிகாட்டியிருக்கிறனே அவன்தான் எங்கள் இறைவன் என்று கூறினார்.

[20:51]

அப்படியென்றால் முன் சென்ற தலைமுறைகளின் நிலைமை என்ன? என்று கேட்டான்.