[21:11]

மேலும், அநியாயக்கார(ர்கள் வாழ்ந்த) ஊர்கள் எத்தனையையோ நாம் அழித்தோம்; அதற்குப் பின் (அங்கு) வேறு சமூகத்தை உண்டாக்கினோம்.

[21:12]

ஆகவே, அவர்கள் நமது வேதனை (வருவதை) உணர்ந்தபோது, அவர்கள் அங்கிருந்து விரைந்தோடலானார்கள்.

[21:13]

விரைந்து ஓடாதீர்கள், நீங்கள் அனுபவித்த சுக போகங்களுக்கும், உங்கள் வீடுகளுக்கும் திரும்பி வாருங்கள்; (அவை பற்றி) நீங்கள் கேள்வி கேட்கப்படுவதற்காக (என்று அவர்களுக்கு அறிவிக்கப்பட்டது).

[21:14]

(இதற்கு அவர்கள்) "எங்கள் கேடே! நாங்கள் நிச்சயமாக அநியாயக்காரர்களாக இருந்தோம்" என்று வருந்திக் கூறினார்கள்.

[21:15]

அறுவடை செய்யப்பட்ட வயலின் அரிதாள்கள் எரிந்தழிவது போன்று அவர்களை நாம் ஆக்கும் வரை அவர்களுடைய இக்கூப்பாடு ஓயவில்லை.

[21:16]

மேலும், வானையும், பூமியையும் அவற்றுக்கு இடையே இருப்பவற்றையும் விளையாட்டுக்கான நிலையில் நாம் படைக்கவில்லை.

[21:17]

வீண் விளையாட்டுக்கென (எதனையும்) நாம் எடுத்துக்கொள்ள நாடி, (அவ்வாறு) நாம் செய்வதாக இருந்தால் நம்மிடத்தி(ல் உள்ள நமக்கு தகுதியானவற்றி)லிருந்தே அதனை நாம் எடுத்திருப்போம்.

[21:18]

அவ்வாறில்லை! நாம் சத்தியத்தை கொண்டு, அசத்தியத்தின் மீது வீசுகிறோம்; அதனால், (சத்தியம் அசத்தியத்தின் சிரசைச்) சிதறடித்துவிடுகிறது பின்னர் (அசத்தியம்) அழிந்ததே போய்விடுகிறது. ஆகவே, நீங்கள் (கற்பனையாக இட்டுக்கட்டி) வர்ணிப்பதெல்லாம் உங்களுக்கு கேடுதான்.

[21:19]

வானங்களிலும் பூமியிலும் உள்ளோரெல்லாம் அவனுக்கே உரியோராவார்கள்; மேலும் அவனிடம் இருப்பவர்கள் அவனுக்கு வணங்குவதை விட்டுப் பெருமையடிக்க மாட்டார்கள்; சோர்வடையவுமாட்டார்கள்.

[21:20]

இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

[21:21]

பூமியில் உள்ளவற்றிலிருந்து இவர்கள் தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கின்றார்களே! அவை (இறந்தோரை) உயிர் கொடுத்து எழுப்புமா?

[21:22]

(வான், பூமி ஆகிய) இவற்றில் அல்லாஹ்வையன்றி வேறு தெய்வங்கள் இருந்திருந்தால், நிச்சயமாக இவையிரண்டும் அழிந்தே போயிருக்கும், அர்ஷுடைய இறைவனாம் அல்லாஹ், அவர்கள் வர்ணிக்கும் (இத்தகைய) தன்மைகளிலிருந்து மிகவும் தூய்மையானவன்.

[21:23]

அவன் செய்பவை பற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள்.

[21:24]

அல்லது, அவர்கள் அல்லாஹ்வையன்றி (வேறு) தெய்வங்களை எடுத்துக் கொண்டிருக்கிறார்களா? "அப்படியாயின், உங்கள் அத்தாட்சியை நீங்கள் கொண்டு வாருங்கள்; இதோ என்னுடன் இருப்பவர்களின் வேதமும், எனக்கு முன்பு இருந்தவர்களின் வேதமும் இருக்கின்றன" என்று நபியே! நீர் கூறும்; ஆனால் அவர்களில் பெரும்பாலோர் சத்தியத்தை அறிந்து கொள்ளவில்லை ஆகவே அவர்கள் (அதைப்) புறக்கணிக்கிறார்கள்.