[21:58]

அவ்வாறே அவர், அவற்றில் பெரியதைத் தவிர (மற்ற) எல்லாவற்றையும் துண்டு துண்டாக்கினார்; அவர்கள் அதன்பால் திரும்புவதற்காக (அதை விட்டு விட்டார்).

[21:59]

எங்கள் தெய்வங்களுக்கு இவ்வாறு (தீங்கு) செய்தது யார்? நிச்சயமாக அவன் அக்கிரமக்காரர்களில் ஒருவனாக இருப்பான் என்று கூறினார்கள்.

[21:60]

அதற்கு (அவர்களில் சிலர்) "இளைஞர் ஒருவர் இவற்றைப் பற்றி (அவதூறாகக்) குறிப்பிட்டு வந்ததை நாங்கள் கேள்விப்பட்டிருக்கிறோம், அவருக்கு இப்றாஹீம் என்று பெயர் சொல்லப்படுகிறது" என்று கூறினார்கள்.

[21:61]

அப்படியானால் அவரை மக்கள் கண் முன்னே கொண்டு வாருங்கள்; அவர்கள் சாட்சியம் கூறும் பொருட்டு என்று சொன்னார்கள்.

[21:62]

இப்றாஹீமே! எங்கள் தெய்வங்களை இவ்வாறு செய்தவர் நீர் தாமோ? என்று (அவர் வந்ததும்) கேட்டனர்.

[21:63]

அதற்கு அவர் "அப்படியல்ல! இவற்றில் பெரிய சிலை இதோ இருக்கிறதே, இது தான் செய்திருக்கும்; எனவே, இவை பேசக்கூடியவையாக இருப்பின், இவற்றையே நீங்கள் கேளுங்கள்" என்று கூறினார்.

[21:64]

(இதற்கு பதில் கூறத் தெரியாத) அவர்கள் தங்களுக்குள் திரும்பி, (ஒருவருக்கொருவர்) "நிச்சயமாக நீங்கள் தாம் (இவற்றை தெய்வங்களாக நம்பி) அநியாயம் செய்து விட்டீர்கள்" என்று பேசிக் கொண்டார்கள்.

[21:65]

பிறகு அவர்கள் (அவமானத்துடன்) தங்கள் தலைகளைத் தொங்கப் போட்டுக் கொள்ளுமாறு செய்யப்பட்டார்கள்; "இவை பேச மாட்டா என்பதைத் தான் நீர் நிச்சயமாக அறிவீரே!" (என்று கூறினர்).

[21:66]

(அப்படியாயின்) அல்லாஹ்வையன்றி உங்களுக்கு எந்த நன்மையும் செய்யாத உங்களுக்கு தீங்கும் அளிக்காதவற்றையா வணங்குகிறீர்கள் என்று கேட்டார்.

[21:67]

சீச்சீ! உங்களுக்கும், நீங்கள் வணங்கும் அல்லாஹ் அல்லாதவற்றுக்கும் கேடு தான்; நீங்கள் இதனை அறிந்து கொள்ளவில்லையா? (என்று இப்ராஹீம் கூறினார்).

[21:68]

(இதற்கு) அவர்கள் நீங்கள் (இவரை ஏதாவது செய்ய நாடினால் இவரை (நெருப்பிலிட்டு) எரியுங்கள்; (இவ்வாறு செய்து) உங்கள் தெய்வங்களுக்கு உதவி செய்யுங்கள்" என்று கூறினார்கள்.

[21:69]

(இப்ராஹீம் தீக்கிடங்கில் எறியப்பட்டவுடன்) "நெருப்பே! இப்ராஹீம் மீது நீ குளிர்ச்சியாகவும், சுகமளிக்கக் கூடியதாகவும், ஆகிவிடு!" என்று நாம் கூறினோம்.

[21:70]

மேலும், அவர்கள் அவருக்குச் சதி செய்ய நாடினார்கள், ஆனால் நாம் அவர்களையே நஷ்டவாளிகளாய் ஆக்கினோம்!

[21:71]

இன்னும், நாம் அவரையும் (அவருடைய சகோதரர் மகன்) லூத்தையும் அகிலத்தாருக்கெல்லாம் பரக்கத்தான - பாக்கியமுள்ள - பூமியாக நாம் ஆக்கியுள்ள (பைத்துல் முகத்தஸில்) ஈடேற்றம் பெறச் செய்தோம்.

[21:72]

இன்னும் நாம் அவருக்கு இஸ்ஹாக்கையும், மேலதிகமாக யஃகூபையும் அளித்தோம்; இவர்கள் ஒவ்வொருவரையும் (ஸாலிஹான) நல்லடியார்களாக்கினோம்.