[21:73]

இன்னும் நம் கட்டளையைக் கொண்டு (மக்களுக்கு) நேர்வழி காட்டும் இமாம்களாக - தலைவர்களாக - நாம் அவர்களை ஆக்கினோம்; மேலும், நன்மையுடைய செயல்களைக் புரியுமாறும், தொழுகையைக் கடைப்பிடிக்குமாறும், ஜகாத்தை கொடுத்து வருமாறும், நாம் அவர்களுக்கு வஹீ மூலம் அறிவித்தோம் - அவர்கள் நம்மையே வணங்குபவர்களாக இருந்தனர்.

[21:74]

இன்னும், லூத்தையும் (நபியாக்கி) - நாம் அவருக்கு ஞானத்தையும், கல்வியையும் கொடுத்தோம்; அறுவறுப்பான செயல்களைச் செய்து கொண்டிருந்(தவர்களின்) ஊரை விட்டும் அவரை நாம் காப்பாற்றினோம்; நிச்சயமாக அவர்கள் மிகவும் கெட்ட சமூகத்தினராகவும், பெரும் பாவிகளாகவும் இருந்தனர்.

[21:75]

இன்னும், அவரை நம்முடைய கிருபையில் நாம் புகுத்திக் கொண்டோம்; நிச்சயமாக அவர் (ஸாலிஹான) நல்லடியார்களில் உள்ளவராகவே இருந்தார்.

[21:76]

இன்னும், நூஹ் - அவர் முன்னே பிரார்த்தித்தபோது, அவருக்கு (அவருடைய பிரார்த்தனையை ஏற்று)) பதில் கூறினோம்; அவரையும், அவருடைய குடும்பத்தாரையும் மிகப் பெரிய துன்பத்திலிருந்தும் நாம் ஈடேற்றினோம்.

[21:77]

இன்னும் நம்முடைய அத்தாட்சிகளைப் பொய்ப்பிக்க முற்பட்டார்களே அந்த சமூகத்தாரிடமிருந்து அவருக்கு உதவி செய்தோம். நிச்சயமாக அவர்கள் மிகக் கெட்ட சமூகத்தாராகவே இருந்தனர் - ஆதலால் அவர்கள் அனைவரையும் நாம் மூழ்கடித்தோம்.

[21:78]

இன்னும் தாவூதும், ஸுலைமானும் (பற்றி நினைவு கூர்வீராக!) வேளாண்மை நிலத்தில் அவர்களுடைய சமூகத்தாரின் ஆடுகள் இரவில் இறங்கி மேய்ந்த போது, அதைப் பற்றி அவ்விருவரும் தீர்ப்புச் செய்த போது, அவர்களுடைய தீர்ப்பை நாம் கவனித்துக் கொண்டிருந்தோம்.

[21:79]

அப்போது, நாம் ஸுலைமானுக்கு அதை (தீர்ப்பின் நியாயத்தை) விளங்க வைத்தோம்; மேலும், அவ்விருவருக்கும் ஞானத்தையும் (நற்)கல்வியையும் கொடுத்தோம்; இன்னும் நாம் தாவூதுக்கு மலைகளையும் பறவைகளையும் வசப்படுத்திக் கொடுத்தோம்; அவை (தாவூதுடன்) தஸ்பீஹ் செய்து கொண்டிருந்தன - இவற்றை யெல்லாம் நாமே செய்தோம்.

[21:80]

இன்னும் நீங்கள் பேரிடும் போது உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான கவசங்கள் செய்வதை, அவருக்கு நாம் கற்றுக் கொடுத்தோம் - எனவே (இவற்றுக்கெல்லாம்) நீங்கள் நன்றி செலுத்துகிறவர்களாக இருக்கிறீர்களா?

[21:81]

இன்னும் ஸுலைமானுக்குக் கடுமையாக வீசும் காற்றையும் (நாம் வசப்படுத்திக் கொடுத்தோம்) அது, அவருடைய ஏவலின் படி, நாம் எந்த பூமியை பாக்கியமுடையதாக்கினோமோ (அந்த பூமிக்கும் அவரை எடுத்துச்) சென்றது இவ்வாறு, ஒவ்வொரு பொருளையும் பற்றி நாம் அறிந்தோராகவே இருக்கின்றோம்.