[21:91]

இன்னும் தம் கற்பைக் காத்துக் கொண்ட (மர்யம் என்ப)வரைப் பற்றி (நபியே! நினைவு கூரும்) எனினும், நம் ஆன்மாவிலிருந்து நாம் அவரில் ஊதி அவரையும், அவர் புதல்வரையும் அகிலத்தாருக்கு ஓர் அத்தாட்சியாகவும் ஆக்கினோம்.

[21:92]

நிச்சயமாக உங்கள் 'உம்மத்து' - சமுதாயம் - (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள்.

[21:93]

(பின்னர்) அவர்கள் தங்களுக்கிடையே தங்கள் (மார்க்க) காரியங்களில் பிளவுபட்டனர். அனைவரும் நம்மிடமே மீள்பவர்கள்.

[21:94]

எனவே, எவர் முஃமினாக, நல்ல அமல்களை செய்கிறாரோ அவருடைய முயற்சி வீணாகி விடாது. நிச்சயமாக நாமே அதை (அவருக்காக)ப் பதிவு செய்து வைக்கிறோம்.

[21:95]

நாம் எவ்வூரார்களை அழித்து விட்டோமோ அவர்கள் (திரும்பவும் இவ்வுலகம் வருவது) தடுக்கப்பட்டுள்ளது நிச்சயமாக அவர்கள் திரும்ப மாட்டார்கள்.

[21:96]

யஃஜூஜு, மஃஜூஜு (கூட்டத்தார்)க்கு வழி திறக்கப்படும் போது, அவர்கள் ஒவ்வொரு மேட்டிலிருந்தும் இறங்கிப் பரவுவார்கள்.

[21:97]

(இறுதி நாளைப் பற்றிய) உண்மையான வாக்குறுதி நெருங்கினால், (அதைக்காணும்) காஃபிர்களின் கண்கள் திறந்தபடியே நிலைகுத்தி நின்று விடும்; (அன்றியும் அவர்கள;) "எங்களுக்கு கேடு தான்! நிச்சயமாக நாங்கள் இதை உதாசீனப்படுத்தியவர்களாகவே இருந்துவிட்டோம்; - அது மட்டுமில்லை - நாம் அநியாயம் செய்தவர்களாகவும் இருந்து விட்டோம்" (என்று கூறுவார்கள்).

[21:98]

நிச்சயமாக நீங்களும், அல்லாஹ்வை அன்றி நீங்கள் வணங்கியவையும் நரகத்திற்கு விறகுகளே! நீங்கள் (யாவரும்) நரகத்திற்கு வந்து சேர்பவர்களே! (என்று அவர்களுக்குச் சொல்லப்படும்.)

[21:99]

இவை தெய்வங்களாக இருந்திருந்தால், (அந் நரகத்திற்கு) வந்து சேர்ந்திருக்க மாட்டா இன்னும் அனைவரும் அதில் நிரந்தரமாயிருப்பர்.

[21:100]

அதில் அவர்களுக்கு வேதனை முனக்கம் இருக்கிறது. மேலும் அவர்கள் அதிலே (எதனையும்) செவியுறமாட்டார்கள்.

[21:101]

நிச்சயமாக, எவர்களுக்கு நம்மிடமிருந்து (மறுமைப் பேற்றுக்கான) நன்மைகள் முன் சென்றிருக்கிறதோ, அவர்கள் அ(ந் நரகத்)திலிருந்து வெகு தொலைவில் இருப்பார்கள்.