[22:24]

ஏனெனில் அவர்கள் (கலிமா தையிபா எனும்) பரிசத்தமான சொல்லின் பக்கம் (இம்மையில்) வழிகாட்டப்பட்டிருந்தார்கள்; இன்னும் புகழுக்குரிய (இறை)வனின் பாதையின் பக்கமும் அவர்கள் செலுத்தப்பட்டிருந்தார்கள்.

[22:25]

நிச்சயமாக எவர் நிராகரித்துக் கொண்டும் உள்ளூர்வாசிகளும் வெளியூர்வாசிகளும் சமமாக இருக்கும் நிலையில் (முழு) மனித சமுதாயத்திற்கும் எதனை (புனிதத்தலமாக) நாம் ஆக்கியிருக்கிறோமோ அந்த மஸ்ஜிதுல் ஹராமை விட்டும், மேலும் அல்லாஹ்வுடைய பாதையை விட்டும், தடுத்துக் கொண்டும் இருந்தார்களோ அவர்களுக்கும் மேலும் யார் அதிலே (மஸ்ஜிதுல் ஹராமில்) அநியாயம் செய்வதன் மூலம் வரம்பு மீற விரும்புகிறானோ அவனுக்கும் நோவினை தரும் வேதனையிலிருந்து சுவைக்கும்படி நாம் செய்வோம்.

[22:26]

நாம் இப்றாஹீமுக்குப் புனித ஆலயத்தின் இடத்தை நிர்ணயித்து "நீர் எனக்கு எவரையும் இனைவைக்காதீர்; என்னுடை (இந்த) ஆலயத்தைச் சுற்றி வருவோருக்கும், அதில் ருகூஃ, ஸுஜூது செய்(து தொழு)வோருக்கும், அதைத் தூய்மையாக்கி வைப்பீராக" என்று சொல்லியதை (நபியே! நினைவு கூறுவீராக).

[22:27]

ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பீராக! அவர்கள் நடந்தும் வெகு தொலைவிலிருந்து வரும் மெலிந்த ஒட்டகங்களின் மீதும் உம்மிடம் வருவார்கள் (எனக் கூறினோம்).

[22:28]

தங்களுக்குரிய பவன்களை அடைவதற்காகவும்; குறிப்பிட்ட நாட்களில் அல்லாஹ் அவர்களுக்கு அளித்துள்ள (ஆடு, மாடு, ஒட்டகம் போன்ற) நாற்கால் பிராணிகள் மீது அவன் பெயரைச் சொல்(லி குhபான் கொடுப்)பவர்களாகவும் (வருவார்கள்); எனவே அதிலிருந்து நீங்களும் உண்ணுங்கள்; கஷ்டப்படும் ஏழைகளுக்கும் உண்ணக் கொடுங்கள்.

[22:29]

பின்னர் அவர்கள் (தலைமுடி இறக்கி, நகம் வெட்டி, குளித்துத்) தம் அழுக்குகளை நீக்கி, தங்கள் நேர்ச்சைகளை நிறைவேற்றி (அந்தப் புனிதமான) புர்வீக ஆலயத்தை "தவாஃபும்" செய்ய வேண்டும்.

[22:30]

இதுவே (முறையாகும்.) மேலும் அல்லாஹ்வின் புனிதமான கட்டளைகளை யார் மேன்மைப்படுத்துகிறாரோ அது அவருக்கு, அவருடைய இறைவனிடத்தில் சிறந்ததாகும்; இன்னும் நாற்கால் பிராணிகளில் உங்களுக்கு (ஆகாதவையென) ஓதப்பட்டதைத் தவிர (மற்றவை) உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளன ஆகவே விக்கிரகங்களின் அசுசத்தத்திலிருந்து நீங்கள் விலகிக் கொள்ளுங்கள். அன்றியும் பொய்யான சொல்லையும் நீங்கள் விலகிக் கொள்ளுங்கள்.