[23:28]

நீரும், உம்முடன் இருப்பவர்களும் கப்பலில் அமர்ந்ததும்; அநியாயக்காரரான சமூகத்தாரை விட்டும் எங்களைக் காப்பாற்றிய அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்" என்று கூறுவீராக!

[23:29]

மேலும் "இறைவனே! நீ மிகவும் பாக்கியம் உள்ள இறங்கும் தலத்தில் என்னை இறக்கி வைப்பாயாக! நீயே (பத்தரமாக) இறக்கி வைப்பவர்களில் மிக்க மேலானவன்" என்று பிரார்த்திப்பீராக! (எனவும் அறிவித்தோம்).

[23:30]

நிச்சயமாக இவற்றில் (பல) அத்தாட்சிகள் இருக்கின்றன் நாம் (இவ்வாறே மனிதர்களைச்) சோதிப்பவராக இருக்கின்றோம்.

[23:31]

பின்னர், (பிரளயத்தில் மூழ்கிவிட்ட) இவர்களை அடுத்து வேறொரு தலைமுறையினரை உண்டாக்கினோம்.

[23:32]

அவர்களிலிருந்தே ஒரு தூதரையும் அவர்களிடையே நாம் அனுப்பினோம். "அல்லாஹ்வையே வணங்குங்கள்; அவனன்றி, உங்களுக்கு (வேறு) நாயன் இல்லை நீங்கள் (அவனுக்கு) அஞ்ச வேண்டாமா?" (என்றும் அவர் கூறினார்.)

[23:33]

ஆனால், அவருடைய சமூகத்தாரில் காஃபிர்களாய் இருந்த தலைவர்களும் இன்னும் இறுதி தீர்ப்பு நாளை சந்திப்பதைப் பொய்ப்படுத்த முற்பட்டார்களே அவர்களும், நாம் அவர்களுக்கு இவ்வுலக வாழ்க்கையில் விசாலமான (சகானுபவங்களைக்) கொடுத்திருந்தோமே அவர்களும், (தம் சமூகத்தாரிடம்) "இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதரேயன்றி வேறில்லை நீங்கள் உண்பதையே அவரும் உண்கிறார்; நீங்கள் குடிப்பதையே அவரும் குடிக்கிறார்.

[23:34]

எனவே உங்களைப் போன்ற ஒரு மனிதருக்கு நீங்கள் கட்டுப்பட்டால் நிச்சயமாக நீங்கள் நஷ்டவாளிகளே!

[23:35]

நிச்சயமாக நீங்கள் மரித்து மண்ணாகவும் எலும்புகளாகவும் ஆன பின்னர் நிச்சயமாக நீங்கள் (மீண்டும்) வெளிப்படுத்தப்படுவீர்கள் என்று அவர் உங்களுக்கு வாக்குறுதி அளிக்கிறாரா?

[23:36]

(அப்படியாயின்) உங்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்டது, வெகு தொலைவு, வெகு தொலைவு (ஆகவே இருக்கிறது.)

[23:37]

நமது இவ்வுலக வாழ்க்கையைத் தவிர (நமக்கு) வேறு வாழ்க்கை இல்லை, நாம் இறப்போம்; (இப்போது) நாம் உயிருடன் இருக்கிறோம்; ஆனால், மீண்டும் நாம் (உயிர் கொடுக்கப்பெற்று) எழுப்பப்டப் போகிறவர்கள் அல்ல.

[23:38]

இவர் அல்லாஹ்வின் மீது பொய்யாக இட்டுக் கட்டும் மனிதரேயன்றி வேறில்லை எனவே இவரை நாம் நம்பமாட்டோம்" என்று (கூறினர்).

[23:39]

என் இறைவா! என்னை இவர்கள் பொய்ப்படுத்துகின்ற காரணத்தினால் எனக்கு நீ உதவி புரிவாயாக! என்று கூறினார்.

[23:40]

சிறிது காலத்தில் அவர்கள் நிச்சயமாகக் கைசேதப்பட்டவர்களாகி விடுவார்கள் என்று கூறினார்.

[23:41]

அப்பால், (இடி முழக்கம் போன்ற) ஒரு சப்தம் நியாயமான முறையில் அவர்களைப் பிடித்துக்கொண்டது நாம் அவர்களை கூளங்களாக ஆக்கிவிட்டோம்; எனவே அநியாயக்கார சமூகத்தார் (இறை ரஹ்மத்திலிருந்தும்) தொலைவிலோ ஆகிவிட்டார்கள்.

[23:42]

அப்பால், நாம் அவர்களுக்குப் பின் வேறு தலைமுறையினர்களையும் உண்டாக்கினோம்.