[23:90]

எனினும், நாம் அவர்களிடம் உண்மையை கொண்டுவந்தோம்; ஆனால் நிச்சயமாக அவர்களோ பொய்யர்களாகவே இருக்கிறார்கள்.

[23:91]

அல்லாஹ் தனக்கென ஒரு மகனை எடுத்துக் கொள்ளவில்லை. அவனுடன் (வேறு) நாயனுமில்லை அவ்வாறாயின் (அவர்கள் கற்பனை செய்யும்) ஒவ்வோர் நாயனும் தான் படைத்தவற்றை(த் தன்னுடன் சேர்த்து)க் கொண்டு போய் சிலர் சிலரைவிட மிகைப்பார்கள். (இவ்வாறெல்லாம்) இவர்கள் வர்ணிப்பதை விட்டும் அல்லாஹ் மிகவும் தூயவன்.

[23:92]

அவன் மறைவனதையும் பகிரங்கமானதையும் நன்கறிபவன்; எனவே அவர்கள் (அவனுக்கு) இணை வைப்பவற்றை விட்டும் அவன் மிகவும் உயர்ந்தவன்.

[23:93]

(நபியே!) நீர் கூறுவீராக "என் இறைவனே! அவர்களுக்கு வாக்களிக்கப்பட்டதை (வேதனையை) நீ எனக்கு காண்பிப்பதாயின்;

[23:94]

என் இறைவனே! அப்போது என்னை அந்த அநியாயக்காரர்களின் சமூகத்துடன் என்னைச் சேர்த்து வைக்காதிருப்பாயாக என்று.

[23:95]

இன்னும், நிச்சயமாக, அவர்களுக்கு வாக்களிப்பதை (வேதனையை) உமக்குக் காண்பிக்க ஆற்றலுடையோம் நாம்.

[23:96]

(நபியே!) நீர் அழகிய நன்மையைக் கொண்டு தீமையைத் தடுத்துக் கொள்வீராக! அவர்கள் வர்ணிப்பதை நாம் நன்கறிவோம்.

[23:97]

இன்னும்; நீர் கூறுவீராக! "என் இறைவனே! ஷைத்தானின் தூண்டுதல்களிலிருந்து நான் உன்னைக் கொண்டு காவல் தேடுகிறேன்" (என்றும்)

[23:98]

'இன்னும் அவை என்னிடம் நெருங்காமலிருக்கவும் என் இறைவனே! உன்னிடம் காவல் தேடுகிறேன்' (என்று கூறுவீராக)!

[23:99]

அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்; "என் இறைவனே! என்னைத் திரும்ப (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!" என்று கூறுவான்.

[23:100]

நான் விட்டுவந்ததில் நல்ல காரியங்களைச் செய்வதற்காக (என்றும் கூறுவான்). அவ்வாறில்லை! அவன் கூறுவது வெறும் வார்த்தையே(யன்றி வேறில்லை) அவர்கள் எழுப்பப்படும் நாள்வரையும் அவர்கள் முன்னே ஒரு திரையிருக்கிறது.

[23:101]

எனவே ஸூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையே பந்துத்துவங்கள் இருக்காது ஒருவருக்கொருவர் விசாரித்துக் கொள்ளவும் மாட்டார்கள்.

[23:102]

எவருடைய (நன்மைகளின்) எடைகள் கனமாக இருக்கின்றனவோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்.

[23:103]

ஆனால், எவருடைய (நன்மைகளின்) எடைகள் இலேசாக இருக்கின்றனவோ, அவர்கள் தாம் தங்களையே நஷ்டப்படுத்திக் கொண்டவர்கள்; அவர்கள் தாம் நரகத்தில் நிரந்தரமானவர்கள்.

[23:104]

(நரக) நெருப்பு அவர்களுடைய முகங்களை கரிக்கும்; இன்னும் அதில் அவர்கள் உதடு சுருண்டு (முகம் விகாரமானவர்களாக) இருப்பார்கள்.