[24:37]

(அவ்வாறு துதி செய்யும்) மனிதர்களை அல்லாஹ்வை தியானிப்பதை விட்டும், தொழுகையை முறையாக நிறைவேற்றுவதை விட்டும் ஜகாத் கொடுப்பதை விட்டும் அவர்களுடைய வாணிபமோ கொடுக்கல் வாங்கல்களோ பாராமுகமாக்கமாட்டா. இதயங்களும், பார்வைகளும் கலங்கித் தடுமாற்றமடையுமே அந்த (இறுதி) நாளை அவர்கள் அஞ்சுவார்கள்.

[24:38]

அவர்கள் செய்த (நற்செயல்களுக்கு) மிக அழகானதை அவர்களுக்கு அல்லாஹ் கூலியாகக் கொடுப்பதற்காகவும், அவனுடைய நல்லருளைக் கொண்டு (அவன் கொடுப்பதை) மேலும் அவன் அதிகப்படுத்துவதற்காகவும் (பயபக்தியுடன் இருப்பார்கள்.) மேலும் அல்லாஹ் தான் நாடியவர்களுக்குக் கணக்கின்றிக் கொடுக்கிறான்.

[24:39]

அன்றியும், எவர்கள் காஃபிராக இருக்கிறார்களோ, அவர்களுடைய செயல்கள் பாலைவனத்தில் (தோற்றமளிக்கும்) கானல் நீரைப் போலாகும்; தாகித்தவன் அதைத் தண்ணீரென்றே எண்ணுகிறான் - (எது வரையெனில்) அதற்கு (அருகில்) அவன் வரும் பொழுது ஒரு பொருளையும் (அங்கே) காணமாட்டானே (அது வரை) ஆனால், அங்கு அவன் அல்லாஹ் (அவனுக்கு விதித்திருக்கும் முடி)வை(யே) காண்கின்றான்; (அதன் படி அல்லாஹ்) அவன் கணக்கைத் தீர்க்கிறான்; மேலும், அல்லாஹ் கணக்குத் தீர்ப்பதில் துரிதமானவன்.

[24:40]

அல்லது (அவர்களின் நிலை) ஆழ்கடலில் (ஏற்படும்) பல இருள்களைப் போன்றதாகும்; அதனை ஓர் அலை மூடுகிறது. அதற்கு மேல் மற்றோர் அலை அதற்கும் மேல் மேகம். (இப்படி) பல இருள்கள். சில சிலவற்றுக்கு மேல் இருக்கின்றன. (அப்பொழுது) அவன் தன் கையை வெளியே நீட்டீனால் அவனால் அதைப் பார்க்க முடியாது எவனுக்கு அல்லாஹ் ஒளியை ஏற்படுத்தவில்லையோ அவனுக்கு எந்த ஒளியுமில்லை.

[24:41]

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? வானங்களிலும் பூமியிலும் உள்ளவையும், பறவைகள் (விண்ணில் தங்கள்) இறக்கைகளை விரித்(துப் பறந்)த வண்ணமாக நிச்சயமாக அல்லாஹ்வைத் தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றன ஒவ்வொன்றும் தன் தொழுகையையும், (அல்லாஹ்வை) தஸ்பீஹு செய்யும் வழியையும் திட்டமாக அறிந்தே இருக்கிறது - அல்லாஹ்வும் அவை செய்பவற்றை நன்கறிந்திருக்கிறான்.

[24:42]

இன்னும் வானங்களுடையவும் பூமியினுடையவும் ஆட்சி அல்லாஹ்விடமே இருக்கிறது அல்லாஹ்வின் பக்கமே (யாவரும்) மீண்டு செல்ல வேண்டியிருக்கிறது.

[24:43]

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது.